தன்னுடைய அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தில் அனைவருமே தன்னிடம் கடன் வாங்கி உள்ள கடனாளிகள் என்று விஜய் தனது பிரமாணபத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆனால் இது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிட உள்ளன. இதனால் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்த முறை தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக விஜய்யின் தவெக எந்த கட்சி உடனும் கூட்டணி அமையாத சூழலில், தவெக தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்றைய தினம் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.
இதில் தவெக தேர்தல் வாக்குறுதிகளை அளித்த விஜய், வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினர். இதில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கிலும் விஜய் போட்டியிடுகிறார். புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா என முக்கிய தலைவர்கள் அனைவருமே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில், இன்றைய தினம் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். விஜய் தனது பிரமாண பத்திரத்தில் , தன்னுடைய மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி, அப்பா சந்திரசேகருக்கு ரூ.3 கோடி, அம்மா ஷோபாவுக்கு ரூ.87 லட்சம், மகன் ஜோசப் சஞ்சய்க்கு ரூ.8 லட்சம், மகள் திவ்யா சாஷாவுக்கு ரூ.4 லட்சம் கடன் வழங்கியுள்ளார் என்று கணக்கு கூறப்பட்டு உள்ளது.
மேலும் திருமணமாகி 25 ஆண்டுகளில் மனைவி, மகன், மகள் பெயர்களில் ஒரு சொத்து கூட வாங்கவில்லை, சொத்துகள் அனைத்தையும் தன்னுடைய பெயரில் மட்டுமே வாங்கிக் குவித்துள்ளதாக தனது வேட்புமனுவில் தகவல் தெரிவித்துள்ளார். தனது பெயரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்கம் இருப்பதாக விஜய் தகவல் தெரிவித்துள்ளார். மனைவி சங்கீதா பெயரில் 3 கிலோ தங்க நகைகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ரூ.1 கோடி மதிப்பிலான 135 காரட் வைர நகைகள் சங்கீதா பெயரில் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி தனது வருமானமாக 2024-25 – ரூ. 184.53 கோடி 2023-24 – ரூ. 105.69 கோடி 2022-23 – ரூ. 198.75 கோடி 2021-22 – ரூ. 237.46 கோடி 2020-21 – ரூ. 8 கோடி எனவும் தன்னுடைய அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தில் அனைவருமே தன்னிடம் கடன் வாங்கி உள்ள கடனாளிகள் என்று விஜய் தனது பிரமாணபத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆனால் இது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.