மாரடைப்பால் மரணம் எனக் கருதப்பட்டு தலைமைக் காவலரின் மரணம் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்ட கொலை என வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காதலுக்காகப் பெற்ற தந்தையையே கொன்றுவிட்டு, அதே சீருடையைப் போட்டுக்கொண்டு வலம் வந்த அந்தப் பெண்ணின் செயல் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா காவல்துறையில் ஜெயந்த் பல்லாவர் என்பவர் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் . இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பணியில் இருந்தபோது சரிந்து விழுந்தார். பின்னர், மார்ச் 25, 2023 அன்று சந்திராபூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவரது மரணம் மாரடைப்பால் ஏற்பட்ட இயற்கை மரணம் எனக் கருதப்பட்டு, காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஜெயந்த் பல்லாவர் பணியில் இருக்கும்போது இறந்ததால், அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில் ஆர்யாவிற்கு ‘கருணை அடிப்படையில்’ காவல்துறை வேலை வழங்கப்பட்டது. தந்தையைக் கொன்ற அதே கையால் துப்பாக்கியை ஏந்தி, காவல்துறை பயிற்சியிலும் ஆர்யா சேர்ந்துள்ளார். இந்நிலையில், ராம்நகர் காவல் நிலையத்தில் ஆஷிஷ் ஷெட்மேட் என்ற இளைஞர் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், தலைமைக் காவலர் ஜெயந்த் பல்லாவரின் மகள் ஆர்யாவும் தானும் 2022-ஆம் ஆண்டு முதல் உறவில் இருந்ததாகவும், இந்த உறவிற்கு ஆர்யாவின் ஜெயந்த் பல்லாவர் எதிர்த்ததால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.
ஆஷிஷ் ஷெட்மேட் – ஆர்யா உறவுக்கு ஆர்யா தந்தை ஒரு தடையாகக் கருதி, அவரைக் கொலை செய்ய ஆஷிஷ் ஷெட்மேட் மற்றும் பிறருடன் சதி செய்து ஒரு சிறுமி மூலம் விஷம் பெறப்பட்டு, கெடம் என்ற ஒரு இடைத்தரகர் வழியாக ₹5,000-க்கு ஆர்யாவிடம் வழங்கப்பட்டது. சம்பவம் நடந்த அன்று, பல்லாவர் பணிக்குக் கிளம்புவதற்குச் சற்று முன்பு, அவரது மகள் ஆர்யா ஒரு மில்க்ஷேக்கில் விஷம் கலந்து அவருக்குக் கொடுக்க அந்தப் பானத்தைக் குடித்த பிறகு பணியிடத்தில் தலைசுற்றல் ஏற்பட்டதாகக் கூறி பல்லாவர் மயங்கி விழுந்தார் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
ஆஷிஷ் ஷெட்மேட் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஆசிப் ராஜா ஷேக்கின் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் அஸ்வினி வகாடே இந்த விசாரணையை நடத்தி வருகிறார்.வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை மற்றும் இரசாயனப் பகுப்பாய்வின் மறுஆய்வு, விஷம் கொடுக்கப்பட்டதை உறுதி செய்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஆர்யாவைத் தனிப்படை அமைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் மறுத்த ஆர்யா, ஆதாரங்களைக் காட்டியவுடன் தனது தந்தையை மில்க்ஷேக்கில் விஷம் வைத்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்யா உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் மீதான கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காதலுக்காகப் பெற்ற தந்தையையே கொன்றுவிட்டு, அதே சீருடையைப் போட்டுக்கொண்டு வலம் வந்த அந்தப் பெண்ணின் செயல் மகாராஷ்டிரா காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.