பொதுப் பாதையைப் பயன்படுத்துதல், ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மறைத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் C. ஜோசப் விஜய் உள்ளிட்ட 500 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் பெரவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிட உள்ளன. இதனால் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்த முறை தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக விஜய்யின் தவெக எந்த கட்சி உடனும் கூட்டணி அமையாத சூழலில், தவெக தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்றைய தினம் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.
இதில் தவெக தேர்தல் வாக்குறுதிகளை அளித்த விஜய், வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினர். இதில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கிலும் விஜய் போட்டியிடுகிறார். புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா என முக்கிய தலைவர்கள் அனைவருமே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் C. ஜோசப் விஜய் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து C. ஜோசப் விஜய் பெரம்பூரில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்த பிரச்சாரத்தை முடித்துவிட்டு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து வி.எஸ். பாபு போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் C. ஜோசப் விஜய் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், கொளத்தூரில் அவர் பரப்புரையில் ஈடுபட்டபோது பிரச்சாரத்தின் போது பொதுப் பாதையைப் பயன்படுத்துதல், ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மறைத்தல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 5 ஒலிபெருக்கிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 30 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாக C. ஜோசப் விஜய் உள்ளிட்ட 500 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.