கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டு, மறுப்பு, எதிர்ப்பு என்று நீண்ட பிரச்சனையை கிளப்பி வந்த பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் – ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா விவகாரம் தற்போது டிஎன்ஏ பரிசோதனை முடிவு வெளியாகியிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும், தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா முன்வைத்த கோரிக்கையே இந்த விவகாரத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்றது.
இந்நிலையில், “குழந்தை எனது என்றால் அறிவியல் முறையில் நிரூபிக்கட்டும்” என்று டிஎன்ஏ பரிசோதனைக்கு தயார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார். அதே நேரத்தில், “நான் முதலில் டிஎன்ஏ சோதனைக்கு தயார்” என்று ஜாய் கிரிஸில்டாவும் ஓபனாக சவால் விடுத்திருந்தார். இதனால் இந்த பிரச்சனை மேலும் தீவிரமடைந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா இடையில் மத்தியஸ்தம் செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷை மத்தியஸ்தராக நியமித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது, தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என நிரூபிக்க, அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என ஜாய் கிரிஸில்டா தரப்பிலும், மரபணு சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தடயவியல் துறையையும், ஆய்வகத்தையும் தொடர்பு கொண்டு, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள், மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன், சீல் வைத்த கவரில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக, வழக்கறிஞர் ஆணையர் தெரிவித்தார்.
இந்த தகவல் வெளிவந்ததுமே சமூக வலைதளங்களில் பரபரப்பு அதிகரித்துள்ளது. இதுவரை “உண்மை என்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தவர்கள். ஆனால், இந்த டிஎன்ஏ முடிவு குறித்து இரு தரப்பினரிடமிருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, ஜூன் 8-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.