ஒரு பெண் தனது பிறந்தவீட்டு வழியில் பெற்ற சொத்து, அவருக்கு குழந்தை இல்லாமல் அவர் இறந்துபோனால், அந்தச் சொத்து அவர் கணவருக்குப் போகாது; மீண்டும் அந்தப் பெண்ணின் பிறந்தவீட்டு வாரிசுகளுக்கே போகும் என ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பளித்துள்ளது. இந்து திருமண சட்டப்படி சொத்துரிமைப் பிரச்சனைகளில் சில சிக்கல்களுக்கு பலருக்கும் விடை தெரியாமல் இருக்கும் ஒரு கேள்விக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் விடையளித்துள்ளது.
ஆந்திர மாநிலம், பெண்டகோட்டா கிராமத்தை சேர்ந்த சிக்கலா வெங்கயம்மாவின் மகன் தத்தாத்ரேயா. இவருக்கு ஸ்ரீவிரிதா மற்றும் சிக்கலா தேவிகா மனசா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். ஸ்ரீவிரிதாவிற்கு சுற்றுவட்டார பகுதியில் திருமணம் செய்தபோது 1 ஏக்கர் 50 சென்ட் விவசாய நிலத்தின் பாட்டி சிக்கலா வெங்கயம்மா 2002-ல் ஒரு பதிவு செய்யப்பட்ட தானப் பத்திரத்தை எழுதி வைத்தார். இதனை தொடர்ந்து, வருவாய்ப் பதிவேடுகளில் ஸ்ரீவிரிதாவின் பெயர் முறையாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அவர் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. இருப்பினும், 2005 நவம்பரில் ஸ்ரீவிரிதா இயற்கைக்கு மாறான முறையில் மரணமடைந்ததார். அவருக்குக் குழந்தைகள் இல்லை, கணவர் மட்டுமே இருந்தார்.
ஆகையால், பாட்டி சிக்கலா வெங்கயம்மா, 2007-ல் அந்த தானப் பத்திரத்தை ரத்து செய்தார். அதைத் தொடர்ந்து 2011-ல் ஒரு பதிவு செய்யப்பட்ட உயிலை எழுதி, அதே சொத்தை தனது இரண்டாவது பேத்தியான சிக்கலா தேவிகா மனசாவுக்கு உயில் எழுதி வைத்தார். சிக்கலா வெங்கயம்மா அவர்களே 2012 மே மாதம் காலமானார். தேவிகா மனசா, தனது பெயரைப் பதிவேடுகளில் பெயர் மாற்றம் செய்ய வருவாய் கோட்ட அலுவலரை அணுகியபோது, அந்த அலுவலர் 2017-ல் அந்த விண்ணப்பத்தை அனுமதித்து, ஸ்ரீவிரிதாவின் பட்டாவை ரத்து செய்து, அதற்கேற்ப பதிவேடுகளைப் புதுப்பிக்குமாறு வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த நிவாரணம் குறுகிய காலமே நீடித்தது. ஐந்தாவது அதிகாரப்பூர்வமற்ற பிரதிவாதியான ஸ்ரீவிரிதாவின் கணவர், வருவாய் கோட்ட அலுவலரின் உத்தரவை எதிர்த்து அனகாபள்ளி மறுஆய்வு ஆணையம் மற்றும் இணை ஆட்சியரிடம் வழக்குத் தொடர்ந்தார். அந்த ஆணையம், 2023 ஏப்ரலில் பெயர் மாற்ற உத்தரவை ரத்து செய்து, தானப் பத்திர ரத்து சட்டப்படி பயனற்றது என அறிவித்து, அதற்குப் பதிலாக கணவரின் பெயரை வருவாய் பதிவேடுகளில் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து இரண்டாவது பேத்தி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தார்லா ராஜசேகர் ராவ் முன்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரண்டாவது பேத்தி தரப்பு வாதிடுகையில், இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15(2)(a)-இன் படி, ஒரு பெண் தனது பெற்றோரிடமிருந்து (அல்லது முன்னோர்களிடமிருந்து) பெற்ற சொத்து, அவருக்குக் குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அவருடைய தந்தையின் வாரிசுகளுக்கே செல்லும்.
எனவே, கணவருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை. மேலும், சிவில் நீதிமன்றமும் தங்களுக்கு ஆதரவாக ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது என்று வாதிட்டார் எதிர்மனுதாரர் தரப்பு (முதல் பேத்தியின் கணவர்): ஒருமுறை தானமாக வழங்கப்பட்ட சொத்தை பாட்டி ரத்து செய்தது சட்டப்படி செல்லாது. மனைவிக்கு வந்த சொத்து என்பதால் அது கணவருக்குத்தான் சேர வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி ராஜசேகர் ராவ் தனது தீர்ப்பில் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் விதிகளை மிகத் தெளிவாக விளக்கினார்.
சட்டப் பிரிவு 15(2)(a)வின் படி, ஒரு இந்துப் பெண் தனது தந்தை அல்லது தாயிடமிருந்து வாரிசுரிமை அடிப்படையில் பெற்ற சொத்து, அவருக்கு வாரிசுகள் (குழந்தைகள்) இல்லாத நிலையில் அவர் இறந்துவிட்டால், அது அவருடைய தந்தையின் வாரிசுகளுக்கே திரும்பச் செல்லும். இச்சட்டப்படி, பெற்றோரிடமிருந்து வந்த சொத்தில் கணவருக்கோ அல்லது கணவரின் வாரிசுகளுக்கோ எந்தப் பங்கும் கிடையாது.
அந்தச் சொத்தின் மீது கணவருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லாதபோது, பாட்டி செய்த தானப் பத்திர ரத்து நடவடிக்கையை அவர் கேள்வி கேட்க முடியாது. இணை ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, அந்தச் சொத்தை இரண்டாவது பேத்தியின் (மனுதாரர்) பெயருக்கு மாற்றம் செய்யும்படி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இன்னும் தெளிவாக சுருக்கமாக கூறுவது என்றால், ஒரு பெண் தனது பிறந்தவீட்டு வழியில் (பெற்றோர்/தாத்தா பாட்டி) பெற்ற சொத்து, அவருக்கு குழந்தை இல்லாமல் அவர் இறந்துபோனால், அந்தச் சொத்து அவர் கணவருக்குப் போகாது; மீண்டும் அந்தப் பெண்ணின் பிறந்தவீட்டு வாரிசுகளுக்கே போகும் என ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பளித்துள்ளது.