21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு கருவியாக சமூக வலைதளங்களை லட்சக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒரு தரப்பினர் ஆபத்தான காரியங்கள் என்று உணராமல், சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற காரணத்திற்காக வெறும் புடவை கட்டிக்கொண்டு ரீல்ஸ் செய்வது, போக்குவரத்து நிறைந்த நடு சாலையில் ரீல்ஸ் செய்வது, கொட்டும் பனியில் ரீல்ஸ் செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இன்ஸ்டாவில் பிரபலமாக வேண்டும், அல்லது நமக்கு வியூஸ் நிறைய வர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆபத்தான இடத்தில் இருந்து ரீல்ஸ் செய்து தங்களின் சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். அப்படிப்பட்ட ஆசையில் ஈடுபடும் போது தொடர்ந்து உயிரும் பறிகொடுத்துள்ளனர். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், பரேலி அருகேயுள்ள ரிச்சோலா கிஃபாயத்துல்லா என்கிற கிராமத்தை சேர்ந்த சலூன் கடை வைத்து நடத்தி வரும் இளைஞர் மொஹ்த் ஃபைஸான்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று, தனது நண்பர் அனூஜ் காங்வார் என்பவரை, அழைத்துக்கொண்டு மாலை 4.30 மணியளவில் பரேலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே மொஹ்த் ஃபைஸான் சென்றிருக்கிறார். அந்த மேம்பாலத்தில் கூரை போடும் கான்கிரீட் ஸ்லாப் மீது ஏறி நின்று, சில போட்டோக்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.
இவரை ரீல்ஸ் எடுக்க, அவரது நண்பரும் அருகில் இருக்கும் இடத்தில் நின்று கொண்டு போன் கேமராவால் ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அப்போது நின்று கொண்டிருந்த மொஹ்த் ஃபைஸான் திடீரென அந்த கூரை பேலன்ஸ் தவறி கீழே விழுந்தார். அவர் விழும் போது அவருக்கு பின்னே அந்த சிமெண்ட் கூரைகளும் மொஹ்த் ஃபைஸான் மீது விழுந்தன.
தனது நண்பன் கீழே விழுந்ததை பார்த்து அனூஜ் காங்வார் அக்கம் பக்கத்தினரை சத்தம் போட்டு அழைத்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடி வந்திருக்கின்றனர். மொஹ்த் ஃபைஸான் மீது இருந்த அந்த கான்கிரீட் கூரையை எடுக்க ஒரு இயந்திரத்தின் உதவியுடன் அந்த கூரையை எடுத்துள்ளனர். ஆனால் இதை செய்வதற்கு அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகியிருக்கிறது. கடைசியில், ஃபைஸான் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.