திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டை செல்லும் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்பட அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் நள்ளிரவில் வந்திறங்குவது வழக்கம். அந்த வகையில் ஆந்திராவில் இருந்து வாழைத்தார் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று, செப்டம்பர் 29-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்தது.
இந்த வாகனத்தின் ஓட்டுநர், ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனை மற்றும் சுவாமி தரிசனம் செய்ய, தன் அக்காவையும், 19 வயதான அக்கா மகளையும் அழைத்து வந்துள்ளார். சரக்கு வாகனம் திருவண்ணாமலையை நெருங்கியதும், புறவழிச்சாலை வழியாக வேட்டவலம் சாலையில் இருந்து நகருக்குள் செல்ல ஓட்டுநர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, அதிகாலை 2:00 மணியளவில், புறவழிச்சாலை வழியாக ஏந்தல் என்ற இடத்தில் சென்றபோது, அங்கு ரோந்து பணியில் இருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வந்த சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது, ஓட்டுநருடன் இரண்டு பெண்கள் இருந்ததால், சந்தேகம் ஏற்படுவதாக கூறி மூவரையும் கீழே இறக்கி உள்ளனர். அப்போது, ‘இது என் அக்கா, பக்கத்தில் நிற்பது என் அக்கா மகள். ஆந்திராவில் இருந்து ஆயுத பூஜைக்காக வாழைத்தார் ஏற்றி வருகிறேன். அக்கா மற்றும் அக்கா மகளையும், சுவாமி தரிசனம் செய்ய அழைத்து வந்தேன்’ என ஓட்டுநர் கூறியுள்ளார். நீ சொல்வதை எங்களால் நம்ப முடியாது. நீ வாகனத்தை எடுத்துச் சென்று, வாழைத் தார்களை இறக்கிவிட்டு கோவிலுக்கு வந்து விடு. நாங்கள் இரண்டு பெண்களையும், எங்கள் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு வந்து விடுகிறோம்’ என்று கூறியுள்ளனர். ஓட்டுநர் மறுப்பு தெரிவித்த போது, ‘உன் மீது கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து விடுவோம்’ என மிரட்டி உள்ளனர்.
அதன்பின், இரண்டு பெண்களையும் தனித்தனியாக இரண்டு இரு சக்கர வாகனத்தில் ஏற்றி, ஏந்தல் கிராமம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் இதனை கண்ட அந்த பெண்ணின் தாயார் கூச்சலிட்ட உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். இதைப் பார்த்ததும் இளம் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு 2 காவலர்களும் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது அந்த இளம் பெண்பெண் மயங்கிய நிலையில் இருந்திருக்கிறார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவல் அறிந்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மருத்துவமனைக்கு சென்று இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியது மட்டுமின்றி சம்பவம் நடந்த ஏந்தல் பகுதிக்கும் சென்று ஆய்வு செய்தார். அப்போது, காவலர்கள் இருவரும் மனித மிருகங்களாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் அளித்த புகாரின்படி, மகளிர் காவல் நிலைய காவல்துறை வழக்கு பதிவு செய்து, காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோரை கைது செய்தனர். உடனடியாக, ‘பணியிடை நீக்கம்’ செய்யப்பட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் காவல்துறையினருடன் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து அந்த பெண், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 311-ன் கீழ், காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்து, பொறுப்பு தமிழ்நாடு காவல்துறை தலைவர் வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.