ஆந்திரா மாநிலம் மெதக் மாவட்டம் கொள்சாரம் மண்டலத்தில் அப்பாஜி பள்ளி என்ற சிறு கிராமம் உள்ளது. இங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் ஒரு பெண் உடம்பெல்லாம் காயங்களுடன் நிர்வாண கோலத்தில் விழுந்து கிடந்துள்ளார். நேற்று முன்தினம் கிராம மக்கள் சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர்.
காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிர்வாண நிலையில் உடலில் காயங்களுடன் வலியில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர். உடனே அப்பெண்ணை மீட்டு காவல்துறையினர் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும், குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு பதறியடித்து கொண்டு ஓடிவந்தனர். முதலுதவி சிகிச்சை தந்ததையடுத்து, அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை தருவதற்காக அந்த பெண்ணை, ஐதராபாத் காந்தி மருத்துவமனைக்கு கணவரும், குடும்பத்தினரும் கொண்டு சென்றனர். மருத்துவர் எவ்வளவோ போராடியும் அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அப்போதுதான் காட்டில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பெண் பழங்குடியின பெண் என்பது தெரியவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கூலி வேலைக்காக அந்த கிராமத்துக்கு வந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த சிலர், நைசாக பேச்சு தந்து காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றிருக்கிறார். பிறகு அப்பெண்ணின் சேலையை உருவி, அங்கிருந்த மரத்தில் அதே சேலையால் கட்டி வைத்திருக்கிறார்கள்.
பிறகு அப்பெண்ணை முழுமையாக நிர்வாணப்படுத்தி பாலியல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த பெண் கடுமையாக பாதிக்கப்பட்டார்.. பிறகு அந்த கும்பல் அப்பெண்ணை அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளார்கள். இதனால் அந்த பெண் விடிய விடிய இரவெல்லாம் நிர்வாணமாகவும், காயங்களின் வலியுடனும், சாப்பாடு, தண்ணி இல்லாமலும் உயிருக்காக போராடி உள்ளார். மறுநாள் காலையில் அருகிலிருந்த கிராமத்தினர் காட்டுப்பகுதிக்கு சென்றபோதுதான், அவரை பார்த்துவிட்டு உடனடியாக தகவல் அளித்தது விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், பழங்குடியின பெண்ணை, கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த குரூரர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், விசாரணை துரிதமாக நடந்து வருவதால் குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.