ஆரியமும் திராவிடமும் வெவ்வேறு கிடையாது. இரண்டும் ஒன்றுதான்… ஒரு பொது தொகுதியை திமுகவிடமிருந்து கேட்டுப்பெற அண்ணன் திருமாவளவன் என்ன பாடு படுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை பிரதான அரசியல்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக தொடங்கியுள்ளது.
மேலும் தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் அடுத்தடுத்து இருமுறை ஆட்சி அமைக்க முடியாமல் இருந்ததை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடைத்து அதிமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்தார் . அதோபோல திமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற குறையை போக்க மு.க.ஸ்டாலின், தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். மறுபுறம், அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தன் மீதான தொடர் தோல்வி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் சில அமைப்புகள் 2019 தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி உருவான நிலையில் அதில் இருந்த கட்சிகள் தற்போது வரை தொடர்ந்து பக்கபலமாக இருக்கிறது. ஆனால், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைந்திருக்கும் நிலையில், பாஜகவோடு கடந்த காலங்களில் கூட்டணி அமைத்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, மக்கள் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் சேரலாம் என கூறப்படுகிறது. மேலும் பாமகவும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கியுள்ளார். மறுபுறம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில், இரண்டு பிரதான கட்சிகளுடன் 2026 தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது.
மறுபுறம் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை அதிமுக மற்றும் பாஜக உடைக்கும் வழிகளில் முயற்சி செய்த போதிலும் அவர்களின் பாச்சா திமுக கூட்டணியில் இருபவர்களிடன் பலிக்கவில்லை. மேலும் திருமாவளவன் அவர்களுக்கு தெரியவில்லை என்று பல இடங்களில் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார். இதனால் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்பத்தூரில் திமுக சார்பாகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், புதிதாகக் கிளம்பி இருக்கும் அமைப்புகள் தமிழ் தேசியம் பேசுகிறோம் என்ற பெயரில், தமிழ்த் தேசியத்தின் உண்மையான எதிரி யார் என்பதை மக்களுக்குச் சொல்லாமல், தமிழ்த் தேசியத்தின் எதிரி கருணாநிதியும், திமுகவும் தான் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள். அவருக்கு நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்போம் என்று வெறுப்பை உமிழக் கூடிய அளவிற்குப் பேசுகிறார்கள். ஆனால் என்றாவது எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா குறித்து எங்காவது விமர்சித்தது உண்டா? ஏன் கருணாநிதி மட்டும் குறி வைக்கப்படுகிறார். பெரியார் அரசியலைத் தான் அண்ணா பேசினார். பெரியாரின் பேருருவம் அண்ணாவால் தான் வெளிப்பட்டது.
இல்லையென்றால் மறைக்கப்பட்டு இருக்கும். எம்ஜிஆர் உருவானதால் ஒரு நன்மை உண்டானது. எம்ஜிஆர் கருணாநிதிக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்தார், விமர்சனம் செய்தார். திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்வதற்குக் காரணமாக இருந்தார். ஒரு பார்ப்பன பெண்மணியே திராவிட கட்சியின் தலைவராக அமையப் பாதை போட்டுக் கொடுத்தார் என்ற விமர்சனங்கள் இருக்கிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், தேசியக் கட்சிகளால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் இருந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக என்று அரசியல் சுழல நேர்ந்தது. காங்கிரஸ் வளர முடியாமல் போனது என்பதை விட, பாஜக காலூன்ற முடியாமல் போனது. காங்கிரஸ் இங்கே வலிமைப் பெற்றிருந்தால், அவர்களுக்கு எதிராக பாஜக காலூன்றி இருந்திருக்கும். காங்கிரஸ் வலிமை குறைந்ததற்கு எம்ஜிஆரின் எழுச்சி காரணம். எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா வந்த போதும், கருணாநிதி தான் மையப் புள்ளியாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார். இந்த திருமாவளவன் பேசியத்திற்கு ரத்தத்தின் ரத்தங்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. நேரடியாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன் கருத்துக்கு விமர்சனங்களை அடுக்கியுள்ளார்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, “பிராமண எதிர்ப்பு காட்டி திராவிட இருப்பை கட்டியவர்கள் இவர்கள். இதே வீரமணி, சமூக நீதி காத்த வீராங்கனை என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு செங்கோல் கொடுத்தாரே! பெரியார், அண்ணா வழியில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் நீங்கள் செய்யாததை அம்மையார் ஜெயலலிதா செய்தார்களே! பொது தொகுதியில் ஒரு ஆதி தமிழ் மகனை நிறுத்த முடிகிறதா? அண்ணன் ஆ.ராசா பெரம்பலூர் தொகுதியில் நிற்கிறார்.
அது பொது தொகுதியாக மாறுகிறது. அப்படி மாறிய பிறகு ஆதி திராவிடர்கள் மட்டுமே வாக்களித்துதான் அண்ணன் வென்றாரா? எல்லா சாதியினரும் சேர்ந்துதானே வாக்களித்தார்கள்? ஆனால் ஏன் கருணாநிதி, நீலகிரியில் ஆ.ராசாவை நிற்க வைத்தார்? பக்கத்தில் இருக்கும் திருச்சியில், தலித் எழில்மலை என்பவரை பொது தொகுதியில் நிறுத்தி ஜெயலலிதா வெற்றி பெற வைக்கவில்லையா? அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவரை சபாநாயகராக மாற்றவில்லையா? நான் உட்பட அனைவரும் எழுந்திருக்க வேண்டும் என்கிற உயரத்தில் அருந்திய சமூகத்தினரை அமர வைக்கவில்லையா?
தனபால் வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று சொன்னபோது, உன்னை உணவுத்துறை அமைச்சராக்குகிறேன் என்று ஆக்கவில்லையா? இதெல்லாம்தானே மாறுதல். அதைகூட நீங்கள் செய்யவில்லையே! இந்த தேர்தலிலாவது பொது தொகுதியில் நிறுத்துவார்களா! ஒரு பொது தொகுதியை திமுகவிடமிருந்து கேட்டுப்பெற அண்ணன் திருமாவளவன் என்ன பாடு படுகிறார்! ஆரியமும் திராவிடமும் வெவ்வேறு கிடையாது. இரண்டும் ஒன்றுதான். ஒரு நாள் இருவரும் கட்டிப்பிடித்து கைகுலுக்கி சங்கமிப்பார்கள், பார்த்துக் கொண்டே இருங்கள்” என சீமான் தெரிவித்தார். +