சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இரண்டே நிமிடத்தில் வெறும் 500 ரூபாய் செலுத்தினால், இருதய அடைப்புகளை தெரிந்துகொள்ள CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு மருத்துவமனையை விடவும் உயர்ரகமான வசதிகள் உள்ள சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைகள் மிக குறைந்த கட்டணத்தில் செய்யப்படுகிறது.
அதேபோல் மிக உயர்ரக அறுவை சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, 500 ரூபாய் செலுத்தினால், இரண்டே நிமிடத்தில் இருதய அடைப்புகளை அறிய CT கால்சியம் ஸ்கோரிங் என்ற பரிசோதனை முறை முடியும். இந்த பரிசோதனை மூலம் ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்று கண்டறிந்து எங்கு அடைப்பு இருக்கிறது, எந்த அளவிற்கு கொழுப்பு படிந்துள்ளது என்பது துல்லியமாக தெரிவிக்கப்படும். இந்த பரிசோதனை மேற்கொள்ள அதிநவீன சிடி ஸ்கேன் பரிசோதனை கருவி உள்ளது. இதன் மூலம் ஊசிகளோ, மருந்துகளோ இல்லாமல் எளிய முறையில் 2 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
CT கால்சியம் ஸ்கோரிங் என்பது நவீன மருத்துவத்தில் உள்ள ஒரு அதிநவீன CT ஸ்கேன் பரிசோதனை முறை ஆகும். இதன் மூலம், ஒருவரின் இதயத் தமனிகளில் படிந்துள்ள கால்சியத்தின் அளவைக் கண்டறிய முடியும். கால்சியம் படிவுகள் என்பது, எதிர்காலத்தில் இதய அடைப்புகள் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறிப்பது ஆகும். இந்தப் பரிசோதனையின் முடிவுகள் ஒரு மதிப்பெண்ணாக வழங்கப்பட்டு, மாரடைப்புக்கான ஆபத்து எந்த அளவில் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கணிக்க உதவுகிறது. பரிசோதனை நேரம் வெறும் 2 நிமிடங்களில் முடிந்துவிடும். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 500 ரூபாய் என்ற சலுகை விலையில் வழங்கப்படுகிறது.
பொதுவாக மற்ற இரத்தப் பரிசோதனைகள் (கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவு) எதிர்கால ஆபத்தை மட்டுமே சொல்லும். ஆனால், CT கால்சியம் ஸ்கோரிங் பரிசோதனை, இதயத்தின் இரத்தக் குழாய்களில் எவ்வளவு சேதம் கால்சியம் படிவு ஏற்பட்டுள்ளது என்பதை கண் முன்னே காட்டிவிடும். மாரடைப்பை முன்கூட்டியே கணித்துத் தடுக்க முடியும். CT கால்சியம் ஸ்கோரிங் செய்த பின்னர் ரிசல்ட் மதிப்பெண் வடிவில் வழங்கப்படும். உங்கள் ஸ்கோர் 0-ஆக இருந்தால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு மாரடைப்பு வரும் ஆபத்து மிகக் குறைவு . ஸ்கோர் அதிகமாக இருந்தால், மருத்துவர் உடனடியாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
மாரடைப்பு அறிகுறி உள்ளவர்கள் சிகிச்சைத் திட்டத்தை உடனே தீர்மானிக்க முடியும். தேவையற்ற மருந்துகளைத் தவிர்க்க முடியும். மிதமான கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு இந்த ஸ்கோர் 0 என்று வந்தால், அவர்களுக்கு உடனடியாக ஸ்டேட்டின் போன்ற மருந்துகளைத் தொடங்காமல், உணவு முறை மாற்றங்களை மட்டும் மாற்ற, மருத்துவர்கள் அறிவுரை கூற வாய்ப்பு உள்ளது. அதிக ஸ்கோர் உள்ளவர்களுக்கு உடனடியாக மருந்துகள், உணவு பழக்க வழக்க மாற்றங்கள் மற்றும் கூடுதல் பரிசோதனைகள் (உதாரணமாக, ஆஞ்சியோகிராம்) அவசியமா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்கள். ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த சி.டி. கால்சியம் ஸ்கோரிங் பரிசோதனை வெறும் 500 ரூபாயில் செய்யப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் ₹5,000 முதல் ₹15,000 வரை இந்த பரிசோதனைக்கு செலவாகும் . எனவே ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உயர் தரமான பரிசோதனையைச் செய்ய முடியும். அதேபோல் மிகக் குறுகிய காலத்தில் (2 நிமிடங்களில்) பரிசோதனை முடிந்துவிடுவதால், சிகிச்சை அளிக்கும் பணி வேகமாகத் தொடங்க முடியும். CT கால்சியம் ஸ்கோரிங் பரிசோதனையை பொறுத்தவரை பொதுவாக 40 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள். உயர் இரத்த அழுத்தம்(பிபி) உள்ளவர்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக கொலஸ்ட்ரால் அல்லது ட்ரைகிளிசரைடு அளவு உள்ளவர்கள் செய்ய வேண்டும். ஆனால் மிதமான அல்லது நடுத்தர ஆபத்தில் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும்.
புகைபிடிப்பவர்கள் அல்லது புகைபிடிப்பதை நிறுத்தியவர்கள் மற்றும் குடும்பத்தில் மாரடைப்பு வரலாறு (சிறு வயதிலேயே பெற்றோருக்கு மாரடைப்பு) உள்ளவர்கள் மற்றும் அதிக உடல் எடை அல்லது போதிய உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் செய்ய வேண்டும். ஏற்கனவே மாரடைப்பு வந்தவர்கள் அல்லது இதயத்தில் ஸ்டென்ட் அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்ய தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே அடைப்புகள் இருக்கும். அதனால் செய்ய தேவையில்லை.. அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள் கதிர்வீச்சு அபாயம் காரணமாக செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது குறித்த சந்தேகம் மற்றும் முழு தகவல்களை அறிய மருத்துவர்களை நாடுங்கள்.