ஆசிரியர்கள் மதிப்பெண்களை நோக்கி ஓடும் குதிரைகளாக மாணவர்களை பார்க்கிறார்கள். எனவே உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பாதுகாக்க ‘அகல் விளக்கு’ திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை கீரமங்கலத்தில் அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ‘அகல் விளக்கு’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மாணவிகள் உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

செல்போன்கள் தொடங்கி பல்வேறு வழிகளில் மாணவிகள் உடல், மனம் மற்றும் சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். வளரிளம் சிறுமிகளுக்கு இது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதற்கு முன்னர் வரை சிறுமியை தங்களில் ஒருவராக பார்த்த சமூகம், பூப்படைந்தவுடன் அவளை விலக்கி வைக்கிறது. பொதுவெளியில், விளையாட்டில், நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடைகளையும், கட்டுப்பாடுகளையும் சமூகம் போடுகிறது.
இது சிறுமிகளை திடீர் உளவியல் பாதிப்புகளுக்கு ஆட்படுத்துகிறது. இதற்கிடையில் சினிமாக்கள், நாடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவை இந்த உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வை சொல்லாமல் அதை மேலும் சிக்கலாக்குகிறது. இதனால் குழம்பும் மாணவிகள் கல்வியில் கவனத்தை இழக்கிறார்கள். பெற்றோரிடம் மனம் விட்டு பேச தயங்குகிறார்கள். ஆசிரியர்களோ மதிப்பெண்களை நோக்கி ஓடும் குதிரைகளாக மாணவர்களை பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் பகிரும் இடமாக தோழிகள் இருந்தாலும், அவர்களுக்கே எதுவும் தெரியாத நிலைதான் இருக்கிறது.

எனவே மாணவிகளின் சந்தேகத்திற்கு விடையளிக்கவும், சரியான பாதையை அவர்களுக்கு வழிக்காட்டவும் தோழமை உணர்வுடன் கூடிய ஆசான் தேவை. அப்படியான ஆசான்களாகத்தான் ஆசிரியர்கள் இனி பணியாற்ற இருக்கிறார்கள். இதற்காகத்தான் ‘அகல் விளக்கு’ திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்காக குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இக்குழுவில் ஆசிரியைகள், மாணவிகள் இடம் பெறுவர்.

மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் கண்டறிந்து அதற்குரிய தீர்வுகளை காண்பர். இதற்கான விழிப்புணர்வு கையேடும் வழங்கப்படும். அந்த கையேட்டில் பிரச்சினைகளை தீர்க்கும் முறைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.