ஒவ்வொரு நாளும் இனிமேல் திருட மாட்டேன் என நான் காலையில் எழுந்திருப்பேன். ஆனால் பணம் நகைகளை பார்த்ததும் எப்படியாவது அவற்றை திருட வேண்டும் என என் மனதும் சொல்லும். அதனால் வேறு வழியின்றி தான் திருடினேன். திருடும் போது எனக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். பணம், வசதி, பதவி வந்து விட்ட பிறகும் நகை பணத்திற்காக இல்லாமல் மகிழ்ச்சிக்காக திருட்டில் ஈடுபட்டேன் என பாரதி தெரிவித்தார் .
சென்னை அருகே அரசுப் பேருந்தில் 5 சவரன் நகை திருடிய சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றப் பெண் தலைவியான பாரதி என்பவரைக் கைது செய்துள்ளனர் போலீசார். இந்த நிலையில், தான் 15 ஆண்டுகளாக நகை திருடி வருவதாகவும் அதை வைத்து ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டியுள்ளதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி. பல ஆண்டுகளாகத் திருடிப் பழகி விட்டதால் தன்னால் அதனை விட முடியவில்லை எனவும் கூறி அதிர வைத்திருக்கிறார்.
சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சென்ற பின்னர் அரசுப் பேருந்தில் மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார். அப்போது தனது கைப்பையில் வைத்திருந்த 5 சவரன் நகைகளைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தார். தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை CCTV காட்சிகளை ஆராய்ந்த போது நகையைத் திருடியது திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான பாரதி என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து நகை திருட்டு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை பாரதியைக் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியது. மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தது. குறிப்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின் போது பாரதியைக் குறிப்பிட்டு திமுகவை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில்,பாரதியின் வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,” ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாலும் திருடுவது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். 15 வருடங்களாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். குறிப்பாக கிருஷ்ணகிரி, வேலூர், வாணியம்பாடி, காஞ்சிபுரம், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்தில் சென்று அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பேசி நகை பறித்திருக்கிறேன்.
நகையை திருடியதும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விடுவேன். இதன் மூலம் கிடைத்த பணம் மற்றும் நகைகளை விற்று எனது சொந்த ஊரான நரியம்பட்டு பகுதியில் வணிக வளாகம் ஒன்றை கட்டியுள்ளேன். அதன் மூலமும் எனக்கு மாதம் ஆயிரக்கணக்கில் வாடகை வருகிறது. தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் நின்று நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதற்குப் பிறகும் சில இடங்களில் நகை திருடினேன். ஊராட்சி மன்ற தலைவி நகை திருட்டில் ஈடுபடக் கூடாது என எனது குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சினர்.
ஆனால் நகை திருடும் போது எனக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். பணம், வசதி, பதவி வந்து விட்ட பிறகும் நகை பணத்திற்காக இல்லாமல் மகிழ்ச்சிக்காக திருட்டில் ஈடுபட்டேன். ஒவ்வொரு நாளும் இனிமேல் திருட மாட்டேன் என நான் காலையில் எழுந்திருப்பேன். ஆனால் பணம் நகைகளை பார்த்ததும் எப்படியாவது அவற்றை திருட வேண்டும் என என் மனதும் சொல்லும். அதனால் வேறு வழியின்றி தான் திருடினேன்” என பாரதி கூறியதாக போலீசார் சொல்கின்றனர்.