புறம்போக்கு இடத்தில் கோயிலைச் சுற்றி தீண்டாமை சுவர், இரு சமூகங்களுக்கு இடையிலான சமாதான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இடிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் முத்துலாடம் பகுதியிலுள்ள கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வருவதைத் தடுக்க கோயிலைச் சுற்றி உள்ள இருந்த புறம்போக்கு இடத்தில் தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் புகார் அளித்தனர்.இதன் காரணமாக மாற்று சமூகத்தினர் கோயிலைச் சுற்றி அமைத்த சுவரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுவர் அமைக்கப்பட்டிருந்த பகுதியை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தீண்டாமை சுவர் அமைத்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாற்றுச் சமூகத்தினர் தரப்பில், இது தீண்டாமை சுவர் அல்ல. கோயிலில் திருட்டு, மது அருந்துவதைத் தடுக்கவே சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடந்து செல்ல வழி உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் போது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்காக ஒரு மேடையையும், புறம்போக்கு நிலத்தில் ஒரு பொது கழிப்பறையையும் கட்ட அருந்ததியர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அதே மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு சமூகங்களுக்கு இடையில் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதன்பின் தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில், தீண்டாமை சுவர் அகற்றப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் சுவரை இடித்து அகற்றுவோம் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதன் காரணமாக இரு சமூகங்களுக்கு இடையில் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் முத்துலாடம் பகுதியில் 200-க்கும் அதிகமான காவல்துறை பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர். தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் அழைக்கப்பட்டனர். ஆர்டிஓ முகம்மது ஃபைசல் மற்றும் தாசில்தார் குமரேசன் ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் தீண்டாமை சுவரை அகற்ற ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்பின் உடனடியாக தீண்டாமை சுவர் இடித்து அகற்றப்பட்டது.