சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்கள் ரோந்து இரவு பணியிலிருந்து விலக்கு அளித்து, காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை காவல்துறை கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சட்டம் – ஒழுங்கு, குற்றப்பிரிவு காவலர்களும் மற்றும் ஆயுதப்படை காவலர்களும் இணைந்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் இரவு நேரங்களில் முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் வாகன தணிக்கை நடைபெறுகிறது.
இப்பிரிவுகளில் உள்ள பெண் காவலர்களும், இரவுப் பணி மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில், பெண் காவலர்களின் பணிச்சுமையை குறைக்கவும், அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை பேணிக்காக்கவும், வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலையில் நிர்வகிக்க வசதியாக, இரவு பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை பரிசீலித்த சென்னை காவல் ஆணையர் அருண், 45 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் தலைமை காவலர்கள், பெண் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், பெண் காவல் ஆய்வாளர்களுக்கு இரவு ரோந்து பணியிலிருந்து விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.