தூய்மை பணியாளர்கள் 6-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தண்ணீர் தேவை என்றதும், 500 லிட்டர் தண்ணீர் உடன் பாடகி சின்மயி வந்து வழங்கினார். சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பணி செய்யும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் தூய்மை பணியாளர்கள் 6-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் பிரதிநிதகள் உடன் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் போராட்டக்குழு நிர்வாகிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி தூர்நாற்றம் வீசி வருகிறது.
முகப்பேர், நொளம்பூர் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் குப்பைகளை அருகில் உள்ள காலி இடங்களில் கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரிப்பன் மாளிகையின் முன்பு போராடிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்ட நிலையில், பாடகி சின்மயி 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உடன் போராட்டக் களத்திற்கு வந்தார். தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தங்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு சின்மயி ஆதரவு தெரிவித்தார்.