அதிமுக MLA மகேந்திரன் தோட்டத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உடல் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்து உடல் தகனம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அருகே உள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக MLA மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும், அவரது மகன்கள் தங்கபாண்டியன், இளைய மகன் மணிகண்டன் என்பவர்களும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
மூன்று பேரும் நேற்று இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி, மணிகண்டன் சேர்ந்து தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100-க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்ததால் அவருக்கு முதல் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை மகன் சண்டையை சமாதானம் செய்ய முயன்றுள்ளர். காவல்துறை வந்ததை பார்த்த மணிகண்டன் தோட்டத்தில் சென்று பதுங்கி கொண்டார்.
காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும் மூர்த்தி தங்கபாண்டி புகைப்படங்களை எடுத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இருவரிடமும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது மறைந்திருந்த மணிகண்டன் உதவி ஆய்வாளரை வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகவேல் தப்பிக்க முயன்று ஓடி உள்ளார். ஆத்திரத்தில் இருந்த தங்கபாண்டியும் தந்தை மூர்த்தியும் துரத்தி சென்றுள்ளனர்.

போதையில் இருந்த 3 பேரும் சேர்ந்து உதவி ஆய்வாளரை வெட்டி கொலை செய்தனர். உடன் இருந்த ஓட்டுனரையும் துரத்திச் சென்றுள்ளனர். அவர் ஓடி தப்பி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த குடிமங்கலம் காவல்துறை தப்பிச் சென்ற தந்தை மூர்த்தி மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் என மூன்று பேரையும் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உயிரிழந்த சண்முகவேல் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டிருக்கிறது. கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், சண்முகவேல் உயிரிழப்பு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உடல், உடுமலைபேட்டை தாராபுரம் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். அதன்பின்னர் அங்கு வந்த காவல் துறை தலைவர் சங்கர் ஜிவால், சண்முகவேலுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, சங்கர் ஜிவால், காவல் துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் சண்முகவேலுவின் உடலை தூக்கிச் சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர். மின் மயானத்தில் காவல் துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் முன்னிலையில் காவலர்கள் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், சண்முகவேலின் உடல் தகனம் செய்யப்பட்டது.