கர்நாடகாவில் ஒரு பெண் 3 பேரை காதலித்து திருமணம் செய்து பல லட்சம் ரூபாய் பணமோசடி செய்து விட்டதாக கூறி பாதிக்கப்பட்ட கணவர்கள் காவல்நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் தொட்டபல்லபூர் தாலுக்கா, முகி கிராமத்தைச் சேர்ந்த சுதாராணி. இவர் வீரகவுடா என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட வீரகவுடாவை பிரிந்த அவர், குழந்தைகளையும் விட்டுவிட்டு பிரிந்து சென்று விட்டார். அவரிடம் உறவினர்கள் உள்ளிட்டோர் காரணம் கேட்டபோது, “ஒரு புல்லட் கூட ஓட்டத் தெரியவில்லை. அட்லீஸ்ட் காராவது ஓட்டத் தெரிகிறதா?.. இவர் எல்லாம் ஒரு ஆண் மகனா? என உப்புச்சப்பிலாத காரணங்களைக் கூறி தட்டிக் கழித்ததாகத் தெரிகிறது.
முதல் கணவரைப் பிரித்த சுதாராணி, பெற்ற குழந்தைகளைக் கூட கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அதன்பின் டெலிவரி பாயாக வேலை செய்து வந்த அனந்தமூர்த்தி என்பவரை சுதாராணி சந்தித்துள்ளார். அனந்தமூர்த்தி டெலிவரி பாயாக இருந்தாலும் அவரின் வங்கிக் கணக்கில் ஏராளமான இருந்த பணம் சுதாராணியை ஈர்க்க அனந்தமூர்த்தியுடன் நெருக்கமாக பழகிய அவர், தனது கணவர் உயிரிழந்து விட்டதாகக் கூறி நாடகமாடி இருக்கிறார்.

அந்த கதையை கேட்டு கரைந்துபோன அனந்தமூர்த்தி சுதாராணியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் அனந்தமூர்த்தியுடன் சுமார் ஒன்றரை வருடங்களாக வாழ்ந்து வந்தார். இந்த காலகட்டத்தில், பல்வேறு காரணங்களைக் கூறி சுமார் 20 லட்சம் ரூபாய் வரை பணம் பற்றதாகக் கூறப்படுகிறது. போதிய அளவுக்கு பணத்தை பெற்ற பின் அனந்த மூர்த்திக்கு ஒரு முழுக்கு போட்டு விட்டு சுதாராணி ஓட்டம் பிடித்து விட்டார்.
எங்கே போனார்? என்ன ஆனார்? என அனந்தமூர்த்தி தவித்துக் கொண்டிருந்த போதுதான், சுதாராணி கனகபுராவைச் சேர்ந்த மற்றொரு நபரை திருமணம் செய்து கொண்ட தகவல் கிடைத்து இருக்கிறது. இதை அறிந்ததும், முதல் கணவர் வீரகவுடாவும், இரண்டாவது கணவர் அனந்தமூர்த்தியும் சேர்ந்து தொட்டபல்லபுரா காவல் நிலையத்திற்கு சென்று தங்களுக்கு நீதி வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர்.

சுதாராணி பணத்திற்காக மட்டுமே பழகி திருமணம் செய்துகொண்டு மோசடியை அரங்கேற்றுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தொட்டபல்லாபூர் காவல்துறையினர் புகாரை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.