ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு வழக்கறிஞர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டி, விசாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பெண் கத்தியுடன் வந்து செய்த செயல் நீதிபதியை ஆடிப்போக வைத்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினம் நகரின் அக்கையபாலனியைச் சேர்ந்த லட்சுமி கடந்த திங்கள்கிழமை மதியம் விசாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதியின் அறைக்கு வந்துள்ளார்.
அங்கு நீதிமன்றத்தில் இருந்த பெண் நீதிபதிக்கு முன்பாக நின்றார். ஒரு சிவில் வழக்கில் வழக்கறிஞர் சத்யநாராயண மூர்த்திக்கு கட்டணம் செலுத்தியதாகவும், ஆனால் அந்த வழக்கறிஞர் வழக்கின் விவரங்கள் எதையும் கூறாமல் தனக்கு அநீதி இழைப்பதாகவும் கூறிய அவர், தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கோரினார்.
இல்லையெனில், தன்னுடன் கொண்டு வந்திருந்த கத்தியை காட்டிய அந்த பெண், நீதிமன்ற அறையிலேயே தன்னைத்தானே வெட்டிக்கொள்வதாக கூறினார். இதை கேட்டு பெண் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். சில வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் அவரைச் சமாதானப்படுத்தி சுற்றி வளைத்தனர். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது, அவரது மனநிலை சரியில்லை என்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அவருக்கும் குடும்பத்தினருக்கும் ஆலோசனை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.