தமிழகத்தையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி உலுக்கியது சிறுநீரகம் திருட்டு கும்பல் மீண்டும் விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து நடமாடி வருகிறது. வர்த்தக நகரமான நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகத்தை சட்ட விரோதமாக தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து மூன்று லட்சம் ரூபாய்க்கு வாங்கப்படும் சிறுநீரகங்கள் 50 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவதாக பகீர் புகார் எழுந்திருக்கிறது.
அதே நேரத்தில் சிறுநீரகத்தை வழங்கியவர்களுக்கு அட்வான்ஸ் மட்டும் கொடுக்கப்பட்டு மீதி பணத்தை தருவதில்லை எனவும் கூறப்படுகிறது. மீதி பணத்தை வாங்கினாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை தரப்படாததால் அவர்கள் வாங்கிய பணத்தை சிகிச்சைக்கே செலவழித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான சூழலில் வாழ்வதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக புரோக்கர்கள் பொதுமக்களிடம் பேசிய வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் ஒப்புதல் பெற பேசும் வீடியோக்களும் வெளியாகி இருக்கிறது. தற்போது வெளியாகி உள்ள தகவல் படி நாமக்கல் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒற்றை சிறுநீரகத்துடன் வாழ்ந்து வருவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பிரபல மருத்துவமனைகளும் அதில் பணியாற்றும் மருத்துவர்கள் இந்த கொடூர சம்பவத்திற்கு துணை போவது தெரியவந்துள்ளது.
மேலும் தமிழகத்தின் மிகப்பெரிய நெட்வொர்க் கொண்ட ஒரு மருத்துவமனையும், பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் ஒரு மருத்துவமனையும் இந்த சிறுநீரகம் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.