50 லட்சம் வரதட்சணை கொடுத்தும், கணவர் கூடுதல் பணம் கேட்டு கொடுமை படுத்தியதால் IT ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு சுத்தகுண்டேபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் இவரது மனைவி ஷில்பா(27). இருவரும் IT நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில் ஷில்பா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார்.
ஷில்பா, பிரவீன் திருமணத்தின்போது பிரவீனுக்கு வரதட்சிணையாக ரூ. 50 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில் திருமணமான ஓராண்டில் பிரவீன் தனது IT வேலையை விட்டுவிட்டு, பானிபூரி கடை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. தொழில் தொடங்க கூடுதல் பணம் வாங்கி வருமாறு பிரவீன் அடிக்கடி ஷில்பாவிடம் தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, ஷில்பாவின் குடும்பத்தினர் ரூ. 10 லட்சத்தை பிரவீனுக்கு கொடுத்தனர். ஆனாலும், கூடுதல் பணம் கேட்டு பிரவீனும் அவரது குடும்பத்தினரும் ஷில்பாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இதனால், பிரவீனுடன் வாழ மறுத்து, ஷில்பா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். சில காலம் கழித்து, பிரவீனின் குடும்பத்தினர் ஷில்பாவை சமாதானப்படுத்தி மீண்டும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனாலும், வரதட்சணைக் கொடுமை தொடர்ந்துள்ளது.
இந்த வரதட்சணைக் கொடுமையால் மனமுடைந்த ஷில்பா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஷில்பாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, பிரவீன், அவரது தாய் சாந்தா, தங்கை பிரியா ஆகிய மூவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

கி.மு. 200 -ஆம் நூற்றாண்டு மேற்கு ஐரோப்பியாவில் தோன்றிய வரதட்சணை உலகின் பல நாடுகளில் மறைத்து போனாலும் நாம்நாட்டில் வரதட்சணை தடை சட்டம் கொண்டுவந்து 65 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் தொடர்ந்து பல உயிர் பலிகளை வாங்கிக் கொண்டே உள்ள வரதட்சணை கொடுமைகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே வேதனையான விஷயமாகும்.