கோயம்புத்தூர், மதுக்கரை பிரதான சாலை பழனியப்பா லே அவுட் பகுதியைச் சேர்ந்த முதியவர் சார்லஸ் டேனியல். இவர் கோவைப்புதூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை ரூ. 12.70 லட்சம் கடனாக பெற்று 2016-ஆம் ஆண்டு ஸ்கோடா ரேபிட் கார் வாங்கினார். கார் வாங்கிய நாள் முதல் வட்டியுடன் தவறாமல் செலுத்தி வந்ததாகவும், ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றால் தனது வணிகம் பாதிக்கப்பட்ட 2020 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சுமார் 9 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலுவைத் தொகையைச் செலுத்த அவகாசம் கேட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால், வங்கி உடனடியாகப் பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியதுடன், வாகனத்தை மீட்கும் நடவடிக்கைகளையும் தொடங்கியது. 10.28 லட்சம் வட்டியுடன் கடன் பாக்கி இருப்பதாக 2023- ஆம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி சார்லஸ் டேனியல் காரை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது, வங்கி அதிகாரிகள் ஒரு பொது இடத்தில் அவரிடமிருந்து காரை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு, அவரைச் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வைத்தது.

மேலும் காரின் அப்போதைய மதிப்பு 7 லட்சம் இருக்கும் நிலையில் வேண்டும்மென்றெ சந்தை மதிப்பை விட குறைவான விலை (3 லட்சத்திற்கு) ஏலம் விட்டது மட்டுமின்றி 16 லட்சம் செலுத்துமாறு சார்லஸ் டேனியலுக்கு பாரத ஸ்டேட் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து மிகுந்த மன உளைச்சல் அடைந்த சார்லஸ் டேனியல் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோயம்புத்தூர் நுகர்வோர் ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் சுகுணா பிறப்பித்த உத்தரவில். மனுதாரருக்கு கடுமையான மன உளைச்சல், அலைச்சல், பெருளாதார இழப்பீடு மற்றும் சேவை குறைபாடு ஆகிய காரணங்களுக்காக, வங்கி பாதிக்கப்பட்ட முதியவருக்கு ₹10 லட்சம் இழப்பீடும், ₹10,000 வழக்குச் செலவுத் தொகையாகவும் வழங்க வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.
கடன் தவணையை திருப்பிச் செலுத்தாத பட்சத்தில், வாகனத்தை பறிமுதல் செய்வதற்கு முன் சட்டப்படியான நோட்டீஸ் வழங்கி, முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். முறையான அறிவிப்பின்றி, பொது இடத்தில் வைத்து வாகனத்தை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்தது சட்டவிரோதமானது என ஆணையம் கண்டித்தது.