திருப்பூரில் 2.5 கோடி செலவில் ஊரே மெச்சும் அளவுக்கு ரிதன்யாவின் திருமணம் நடந்த நிலையில் ரிதன்யா. தற்கொலையில் இருந்து, இன்னும் யாருமே மீள முடியாத நிலையில், மற்றொரு கொடுமை திருவள்ளூரில் நடந்துள்ளது.. ஒரே ஒரு பவுன் நகைக்காக, திருமணமான தினத்திலேயே வரதட்சணை டார்ச்சர் ஆரம்பமாகி இருக்கிறது. அடுத்த 4-வது நாள் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகள் பிஏ பட்டதாரி லோகேஸ்வரி. இவருக்கும், பொன்னேரி அடுத்த காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பன்னீர் என்பவருக்கும் கடந்த 27-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது 10 சவரன் வரதட்சணை கேட்ட நிலையில், 5 சவரன் கொடுப்பதாக லோகேஸ்வரியின் பெற்றோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. பின்னர் 4 சவரன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களும், பைக் ஒன்றும் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தின் மூத்த மருமகள் 12 சவரன் வரதட்சணை கொண்டு வந்ததாக பெருமை பேசிய பன்னீரின் குடும்பத்தினர், மீதமுள்ள 1 சவரன் நகையை வாங்கி வருமாறு லோகேஸ்வரியை திருமணமான தினத்திலேயே கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மறுவீட்டுக்காக நேற்று முன்தினம் தாய் வீட்டிற்கு வந்திருந்த லோகேஸ்வரி, தமது பெற்றோரிடம் இதுகுறித்து கூறி வேதனை அடைந்துள்ளார். மேலும் அன்று இரவு புதுத்தம்பதிக்கு விருந்து பரிமாறப்பட்டது. பிறகு அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். அப்போது லோகேஸ்வரி பாத்ரூமுக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் லோகேஸ்வரி வெளியே வராமல் இருந்ததை அவரது அப்பா கஜேந்திரன் கவனித்துவிட்டு, கதவை தட்டி பார்த்துள்ளார்.
ஆனால் பாத்ரூம் உள்ளேயிருந்து எந்த பதிலையும் லோகேஸ்வரி தரவில்லை. இதனால், பதறிப்போன அப்பா, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்தார். கஜேந்திரனின் சத்தத்தை கேட்டு தூங்க சென்றவர்கள் அனைவருமே பதறியடித்து ஓடி வந்தனர்.
உடனடியாக லோகேஸ்வரியை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லோகேஸ்வரியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் லோகேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, லோகேஸ்வரியின் அப்பா கஜேந்திரன் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் ககொடுத்தார். அந்த புகாரில், ‘எனது மகளுக்கும் காட்டாவூரை சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27-ந் தேதி திருமணம் நடந்தது. 4 சவரன் நகை, பைக், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொடுத்தோம். திருமணம் முடித்த நாளிலிருந்து வரதட்சணை கேட்டு எனது மகளை துன்புறுத்தியுள்ளனர். எனது மகளின் செல்போனை பறித்து வைத்துள்ளனர்.

மேலும் மீதம் தரவேண்டிய ஒரு சவரன் நகை, ஏ.சி. வீட்டிற்கு தேவையான பொருட்களை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். நேற்றிரவும் இதுகுறித்து எனது மகளிடம், பன்னீர் கேட்டு சண்டையிட்டார். இருவரையும் சமாதானம் செய்தோம். எனது மகளின் சாவுக்கு பன்னீர் மற்றும் அவரது குடுபத்தினர் தான் காரணம் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமான 4-வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் லோகேஸ்வரியின் கணவர் பன்னீர் மற்றும் மாமியார் பூங்கோதை ஆகியோரை காவல்துறை கைது செய்தனர். மேலும் மாமனார் மற்றும் நாத்தனாரை தேடி வருகின்றனர். ஏற்கனவே திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது பொன்னேரியிலும் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.