திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றபோது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த 20 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளியை தவற விட்ட சென்னையில் சேர்ந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளரை கடவுளை பார்த்தபோல ஆனந்தத்தில் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ராதாகிருஷ்ணன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வந்திருந்தபோது அவர்கள் 20 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளியை தவறவிட்டுள்ளனர். தனது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த நகையை இப்படி தொலைத்து விட்டோமே என்று பதறிக்கொண்டு ராதாகிருஷ்ணன் குடும்பத்தினரும் திருவாரூர் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவாரூர் நகராட்சித் தூய்மை பணியாளர் குப்புசாமி மகன் துரை. இவர் வழக்கம் போல் இன்று காலை தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த ஒரு பை இருப்பதை கண்டு அதில் ஏதோ இருப்பதை உணர்ந்த அவர் அப்படியே வீட்டில் வைத்து விட்டு பணிக்கு சென்று விட்டார். இந்நிலையில், துரையின் மனைவி அந்த பையை பிரித்து பார்த்தபோது தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். உடனே துரையின் மனைவி துரையின் மகனிடம் தகவல் கொடுத்துள்ளார்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட துரையின் மகன் தந்தை துரைக்கு போன் செய்து நீங்கள் கொண்டுவந்து வைத்த பையில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருக்கிறது. ஆகையால் அதை உடனே காவல் நிலையத்தில் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மகனின் சொன்ன வார்த்தையை கேள்விப்பட்ட துரை திருவாரூர் நகர காவல் நிலையத்தில் சென்று ஒப்படைத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர், துரையின் செயலைக் கண்டு வெகுவாக பாராட்டினர். இதையறிந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர், துரையை அழைத்து நன்றி தெரிவித்தனர். இந்த நகைகள் கிடைத்ததும் அவரது மனைவி தூய்மை பணியாளர் வடிவில் கடவுளை பார்த்த ஆனந்தத்தில் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.