ஜிம்பாப்வேயில் நடைபெற்ற U19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் 175 ரன்கள் குவித்து வெறியாட்டம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி, இறுதி மற்றும் தொடரின் சிறந்த வீரர் என இரண்டு விருதுகளை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள தாஜ்பூரில் 2011 -ஆம் ஆண்டு மார்ச் 27 -ந் தேதி சஞ்சீவ் சூர்யவன்ஷி – ஆர்த்தி தம்பதியினருக்கு மகனாக வைபவ் சூரியவன்ஷி பிறந்தார். வைபவ் சூரியவன்ஷின் தந்தை இளம் வயதில் கிரிக்கெட் வீரராக இருந்தார். ஆனால், அதில் அவரால் பெரிய முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. விவசாய பின்னணியை கொண்ட குடும்பத்தில் பிறந்த அவரால் கிரிக்கெட்டுக்கு அதிக பணம் செலவு செய்ய முடியவில்லை.

பின்னர் நான்கு வயதான தனது மகன் வைபவ் சூர்யவன்ஷி உடன் பிளாஸ்டிக் பந்தில் கிரிக்கெட் விளையாடிய போது, அதிரடியாக பந்துகளை அடிப்பதை சஞ்சீவ் சூர்யவன்ஷி பார்த்தார். உடனடியாக சஞ்சீவ் சூர்யவன்ஷி தனது விவசாய நிலத்தில் ஒரு பகுதியை சிறிய மைதானம் போல மாற்றி தனது மகனுக்கு தினமும் பிளாஸ்டிக் பந்தில், பந்து வீசி பயிற்சி அளித்தார். அதன் பிறகு அருகில் இருந்த சிறுவர்களையும் அழைத்து தனது மகனுடன் கிரிக்கெட் விளையாட வைத்தார்.
அப்போது வைபவ் ஆடிய ஆட்டத்தை பார்த்த அவர் தன்னை போல தனது மகனும் கிரிக்கெட்டில் முன்னேற முடியாமல் தவித்து விடக் கூடாது என முடிவு செய்து சமஸ்திபூர் நகரில் இருந்த கிரிக்கெட் பயிற்சி மையத்தில் தனது மகனை சேர்த்து விட்டார். ஆனால் அது அவருக்கு போதுமானதாக இல்லை என்பதால், ஒன்பது வயதில் பீகார் தலைநகர் பாட்னாவில், முன்னாள் ரஞ்சி டிராபி வீரர் மணிஷ் ஓஜா நடத்தி வந்த பயிற்சி மையத்தில் வைபவ் சூர்யவன்ஷி சேர்த்தார்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை காலை 7:30 மணிக்கு தொடங்கி மாலை வரை வைபவ் சூர்யவன்ஷிக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறாக நான்கு வருடங்களை தனது மகனின் பயிற்சி செலவுகளுக்காக தனது நிலங்களில் பல பகுதிகளையும் சஞ்சீவ் சூர்யவன்ஷி.விற்று இருக்கிறார். இந்த சூழ்நிலையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு 12 வயதில் பீகார் மாநில U19 கிரிக்கெட் அணிக்காக வினூ மன்கட் டிராபியில் இடம் பிடித்தார். அங்கிருந்து 2023 -ஆம் ஆண்டில் வைபவ் சூர்யவன்ஷிக்கு தேசிய அளவில் கவனம் கிடைக்க இந்தியா பி அணிக்காக 19 அணியில் இடம் பிடிக்க 6 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்கள் உட்பட 177 ரன்கள் எடுத்தார்.
இதனை தொடர்ந்து, செப்டம்பர் 2024 இல், வைபவ் சூர்யவன்ஷி ஆஸ்திரேலியாவின் U19 அணிக்கு எதிராக இந்திய U19 போட்டியில் அறிமுகமானார். மேலும் வைபவ் சூர்யவன்ஷி தனது U19 டெஸ்ட் அறிமுகத்தில் 58 பந்துகளில் சதம் அடித்து ஒரு இந்திய அளவில் முதல் வீரராகவும், சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது வீரராகவும் அதிவேகமான சதத்தை பதிவு செய்தார்.

நவம்பர் 2024 -ஆம் ஆண்டு வைபவ் சூர்யவன்ஷி 13 வயதில் இந்தியன் பிரீமியர் லீக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ₹ 1.1 கோடிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய வீரர் ஆனார். 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 14 வயது மற்றும் 23 நாட்களில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி ஐபிஎல் வரலாற்றில் இளைய அறிமுக வீரர் ஆனார். மேலும் தனது முதல் ஐபிஎல் போட்டியில், முதல் பந்தில் ஒரு சிக்ஸர் உட்பட 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். மேலும் ஏப்ரல் 28-ந் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல்லில் சதம் அடித்த இளைய வீரர் ஆனார். மேலும் ஒரு இந்தியரின் வேகமான சதமாகவும் அமைந்தது.
அதே ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் T -20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் தனது சதத்தையும், 42 பந்துகளில் 144 ரன்கள் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார்.மேலும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் மகாராஷ்டிராவிற்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி ஒரு சிறப்பான சதத்தை அடித்தார். விஜய் ஹசாரே டிராபியின் போது , வைபவ் சூர்யவன்ஷி அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 36 பந்துகளில் சதம் அடித்தார். அதே தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் 84 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உற்பட 190 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்நிலையில், ஜிம்பாப்வேயில் நடைபெற்றும் U19 உலகக்கோப்பைத் தொடரின் இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம் மற்றும் USA ஆகிய அணிகளுக்கு இடையேயான குரூப்- B சுற்றில், ஜனவரி15-ந் தேதி USA -விற்கு எதிரான போட்டியில் 2 ரன்களும், ஜனவரி 17-ந் தேதி வங்காளதேசத்திற்கு எதிரானபோட்டியில் 72 ரன்களும், ஜனவரி 24 -ந் தேதி நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் 40 ரன்களும் அடித்தார். இதனை தொடர்ந்து சூப்பர் 6 சுற்றில் ஜனவரி 2 -ந் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 52 ரன்களும் மற்றும் பிப்ரவரி 1-ந் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 30 ரன்களும் அடித்தார். பின்னர் பிப்ரவரி 4-ந் தேதி ஆப்கானிஸ்தான் எதிரான போட்டியில் அரையிறுதி போட்டியில் 68 ரன்கள் எடுத்தும் ஒரு சதம் கூட வைபவ் சூர்யவன்ஷி அடிக்கவில்லையே என்று விமர்சனங்கள் இருந்தன.

இந்நிலையில் ஜிம்பாப்வே ஹாராரே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி ருத்திரதான்டவம் ஆடினார். 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து களத்தில் நின்று விளையாடி கொண்டிருந்த வைபவ் சூர்யவன்ஷி அடுத்து 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அரைசதத்தை 32 பந்துகளில் கடந்தார். அதன் பின்னர் மைதானத்தின் யார் பந்து போட்டாலும் அடிப்பேன் என்ற மோட்டுக்கு வந்த வைபவ் சூர்யவன்ஷி மைதானத்தின் நாலாபுறமும் வானவேடிக்கை காட்டினார். இதன் விளைவு அடுத்த 23 பந்துகளில் 50 ரன்கள் சேர்க்க 55 பந்துகளில் சதத்தை எட்டினார்.
அதேபோல், அடுத்த 16 பந்துகளில் 50 ரன்கள் சேர்க்க 71 பந்துகளில் 150 ரன்கள் கடந்து அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த U19 வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். மேலும், U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 150 ரன்கள் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அடுத்த 9 பந்துகளில் 25 ரன்கள் சேர்க்க 80 பந்துகளில் 15 பவுண்டரி, 15 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் குவித்து இறுதிப்போட்டி வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை பதிவு வைத்தார். ஒரு 14 வயது சிறுவனுக்கு இவ்வளவு வலிமையா, என்று கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. ஒரு குழந்தை போன்ற முகம், அபாரமான வலிமை கொண்ட யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா கலந்த கலவையாக வைபவ் சூர்யவன்ஷி இந்த சாதனையை சமூக ஊடகங்கள் புகழ்ந்து கொண்டுள்ளனர்.