கோபிசெட்டிபாளையம் அருகே 15 வயது மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய 50 வயது நபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீபகாலமாக பள்ளிகள், பணியிடங்கள், பயணங்கள் மற்றும் வீடுகள் என அனைத்து இடங்களிலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்முறைகள் நடந்து வருகின்றன. கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, கொடூரமாக தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு மரணமடைந்ததும், அதற்கெதிராக நாடெங்கும் போராட்டங்களின் எதிரொலியால் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க சட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
அதன் பின்னராவது பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்துள்ளதா? என்றால் இல்லை. எந்த ஆண்ணையும் நம்பி பேசக்கூடாது என்ற நிலைமைக்கு நம் சமூகம் தள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பாட்டி வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் தனியாக படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார்.
இதனால், சிறுமி தனது விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்குச் சென்று, அவருக்கு சமையல் செய்து கொடுத்துவிட்டு கவனித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டு இருந்துள்ளார். சிறுமி தந்தையின் நண்பரான மணி என்பவர் கொளப்பலூர் பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சிறுமி வழக்கம் போல் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்த போது, அங்கு வந்த தந்தையின் நண்பரான மணி என்ற அந்த நபர், சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி கட்டாயப்படுத்தி, அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து பெற்றோரிடமோ அல்லது வெளியில் யாரிடமாவது கூறினால், சிறுமியின் தந்தையை கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி, கொடூர சம்பவத்தை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்தது அவருக்கு தெரியவில்லை, பெற்றோர்களும் அதைச் சரியாக கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 25-ந் தேதி இரவு, சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர்கள் அவரை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார்; மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தனர்.
மேற்படி மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், சிறுமி பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் தேவகி என்பவர், கடந்த மே 7-ந் தேதி பெருந்துறை மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நேரடி விரிவான விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஒர்க் ஷாப் நடத்தி வரும் மணி என்பவர் சிறுமியை மிரட்டி சீரழித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சமூகப் பணியாளர் தேவகி கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று முறைப்படி புகார் அளித்தார். புகாரின் பேரில், கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலை மறைவாக இருந்த குற்றவாளி மணியை போக்சோ பிரிவுகளின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.