திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் மனைவியை கொலை செய்துநாடகமாடிய கொத்தனாரையும், உடந்தையாக இருந்த சித்தி மகளான கல்லூரி மாணவியையும் காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மதுராகண்டிகை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகன். இவரின் மனைவி ரேவதி. இவர்களின் மகள் கௌசல்யா பி.எட்., இரண்டாமாண்டு பயின்று வந்தார்.
இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த கொத்தனார் ராஜேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. கௌசல்யாவும் ராஜேசும் உறவினர்கள். திருமணத்துக்குப் பிறகு கணவன் வீட்டில் இருந்தபடியே கௌசல்யா பி.எட் படிப்பை தொடர்ந்து வந்தார். கடந்த 6-ந் தேதி கொத்தனார் வேலைக்கு ராஜேஷ் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த கௌசல்யா, சமையலறையில் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீட்டிற்கு வந்த ராஜேஷ், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் கௌசல்யாவை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கௌசல்யா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து கௌசல்யா மரணம் குறித்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி காவல்துறையினர், கௌசல்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், கவுசல்யாவின் முகத்தில் நக கீறல்களும், உதடு, தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததால், கவுசல்யாவின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து, கவுசல்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்தச் சமயத்தில்தான் பிரேத பரிசோதனையில் கௌசல்யா, கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள், தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, கொத்தனார் ராஜேஷிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தனர். அப்போது, செங்குன்றம் அடுத்த காந்தி நகரை சேர்ந்த அவரது சித்தி மகள் சென்னை, கொருக்குப்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் M.com., 2-ஆம் ஆண்டு படித்த வந்த தீபிகா என்கிற லோகேஸ்வரி-வுக்கும், தகாத உறவு இருந்து வந்துள்ளது.
அதனால் இவர்களின் பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்து இருக்கிறார்கள். ஆனால் பெற்றோரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு இருவரும் தங்களது காதலை தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது, கவுசல்யாவின் கணவர் ராஜேஷுக்கும், சித்தி மகள் தீபிகாவுக்கும் கள்ளக்காதல் தொடர்ந்ததால், அதனை கவுசல்யா தட்டிக் கேட்டுள்ளார். எனவே கௌசல்யாவை கொலை செய்ய ராஜேஷ் திட்டமிட்டு இருக்கிறார். அதை தீபிகாவிடமும் கூறி ஆலோசித்தும் இருக்கிறார். இதையடுத்துதான் சம்பவத்தன்று வேலைக்குச் செல்வதைப் போல சென்ற ராஜேஷ், யாருக்கும் தெரியாமல் வீடு திரும்பி இருக்கிறார்.
அப்போது மனைவி கௌசல்யா சோபாவில் தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறார். அதைப் பார்த்த ராஜேஷ், மற்றும் தீபிகா இருவரும் சேர்ந்து கௌசல்யாவின் மூக்கை பொத்தி கழுத்தை நெரித்து இருக்கிறார். அப்போது கௌசல்யா, போராடியதில் அவரின் முகத்தில் நகக்கீறல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இயைடுத்து கௌசல்யாவின் தலையை டைல்ஸ் தரையில் மோதி காயத்தை ராஜேஷ் ஏற்படுத்தி இருக்கிறார். அதைத் தொடர்ந்து சமையலறையில் எண்ணெய்யில் கால் வழுக்கி கௌசல்யா உயிரிழந்ததைப் போல ராஜேஷ் செட்டப் செய்துள்ளார். அதன்பின்னர் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு கிரில் இல்லாத ஜன்னல் வழியாக வெளியில் சென்றுவிட்டார். என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஷ் மற்றும் தீபிகா ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.