திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மூக்காண்டி. இவர் அப்பகுதியில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்திற்கான வணிக உரிமத்தை நடப்பு ஆண்டிற்குப் புதுப்பிப்பதற்காக, சேரன்மாதேவி கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வரும் இதயக்கனியிடம் மூக்காண்டி முறைப்படி விண்ணப்பித்து இருந்தார்.
விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனி, உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான சான்றிதழை வழங்க வேண்டுமானால் தனக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும் என்று கறாராகக் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாதமூக்காண்டி, சேரன்மாதேவி கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனிக்கு பாடம் புகட்ட நினைத்து திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய 10,000 ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை மூக்காண்டி இதயக்கனியின் அறிவுறுத்தலின்படி, அவரது உதவியாளரான வெங்கடேசனிடம் லஞ்சப் பணத்தைக் கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் எஸ்காலி தலைமையிலான லஞ்ச ஒழிப்புதுறை, இதயக்கனி மற்றும் வெங்கடேசனை கையும் களவுமாக பிடித்து , இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதிரடியாகக் கைது செய்தனர். சேரன்மாதேவியில் அரசு பெண் அதிகாரி லஞ்ச வழக்கில் கைதான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.