எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்திய அரசியல் சாசன சிற்பி பாபா சாஹேப் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar) மத்தியப் பிரதேசத்தின் மஹூ பகுதியில் உள்ள அம்பாவாதே கிராமத்தில் ராணுவப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணி ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாக 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி பிறந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளியிலும், சமூகத்திலும் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்தது.
அம்பேத்கர் தந்தை ராம்ஜி சக்பால் 1894 -இல் ஓய்வு பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பம் பம்பாய் மாகாணத்திலுள்ள சதாராவிற்குக் குடிபெயர்ந்தது. அதன் பின் சிறிது காலத்தில் அம்பேத்கரின் தாயார் இறந்தார். இவரது குடும்பப் பெயரான “சக்பால்” என்பதை மாற்றி, இவரது தந்தை “அம்பேவாதேகர்” என்று பள்ளியில் பதிவு செய்தார். பள்ளியில் அம்பேத்கர் மீது அன்பும் அக்கறையும் காட்டி உதவிய மராத்தியப் பிராமண ஆசிரியரான கிருஷ்ணாசி கேசவ் அம்பேத்கர் நினைவாகத் தன் பெயரை பீம்ராவ் அம்பேத்கர் என மாற்றிக்கொண்டார்.
1907 இல், இவர் தனது பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றபின், பரோடா மன்னரின் உதவியால் அடுத்த ஆண்டு பம்பாய் பல்கலைக்கழகத்தின், எல்பின்சுடோன் கல்லூரியில் சேர்ந்தார். 1912 ஆம் ஆண்டு, இவர் பம்பாய் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் பணியாற்றினார். அங்கும் சாதிக் கொடுமைகள் தொடர்ந்ததால் மனம்நொந்து வீடு திரும்பினார். இதைக் கேள்விப்பட்ட மன்னர் அவரை அழைத்து தவறுக்கு வருந்தினார். 1913 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அம்பேத்கர் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்ததால், மீண்டும் இவர் பம்பாய்க்குத் திரும்பினார்.

1913 -ஆம் ஆண்டு, தனது 22-வது வயதில், பரோடா மன்னர் சயாசிராவ் கெய்க்வாட் நிறுவிய திட்டத்தின் கீழ், அம்பேத்கருக்கு ஒரு மாதத்திற்கு £11.50 உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் இவருக்கு நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழத்தில், முதுகலை கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் உயர்கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். இவர் 1915 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொருளாதாரம் மற்றும் சமூகவியல், வரலாறு, தத்துவம் மற்றும் மானுடவியல் ஆகிய பாடங்கள் பயின்று ‘பண்டைய இந்தியாவில் வாணிபம்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி முதுகலைப் பட்டம் பெற்றார்.
1916 -ஆம் ஆண்டு இவர் இந்தியாவின் தேசிய ஈவுத்தொகை – ஒரு வரலாற்று மற்றும் பகுப்பாய்வு என்ற தலைப்பில் தனது இரண்டாவது முதுகலை ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். மேலும் மே 9 -ந் தேதி, மானுடவியலாளர் அலெக்சாண்டர் கோல்டன்வீசர் நடத்திய கருத்தரங்கில், இந்தியாவில் சாதிகள், அவற்றின் வழிமுறை, தோற்றம் மற்றும் வளர்ச்சி என்ற கட்டுரையை எழுதி சமர்ப்பித்தார். மேலும், இந்தியப் பொருளாதாரம் குறித்து எழுதிய ஆய்வுக் கட்டுரைக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல் என்ற ஆய்வுக் கட்டுரைக்கு முது அறிவியல் பட்டமும், ரூபாயின் பிரச்சினை என்ற ஆய்வுரைக்கு டி.எஸ்.சி பட்டமும் பெற்றார்.
நாடு திரும்பியவர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். பம்பாய் சிடென்ஹாம் கல்லூரியில் பொருளாதாரத் துறை பேராசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் லண்டன் சென்று சட்டம் பயின்றார். பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் கிடைக்க பல்வேறு போராட்டங்களை நடத்தினார். மகத் என்ற இடத்தில் இவர் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தால், நாடு முழுவதும் பிரபலமானார். தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்குப் போராடுவதற்காக ‘பஹிஷ்கிருத் ஹிதகாரிணி சபா’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.
அரசியல் சாசன சபையில் பங்கேற்று, அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் தலைசிறந்த பங்களிப்பை வழங்கினார். நாடு விடுதலை பெற்ற பிறகு உருவாக்கப்பட்ட அரசியல் சாசனக் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். நாட்டின் முதல் சட்ட அமைச்சராகவும் பதவியேற்றார். இந்து மத சாதி அமைப்பை கடுமையாக விமர்சித்தவர், ஆதரவாளர்களுடன் புத்த மதத்துக்கு மாறினார். தாழ்த்தப்பட்டோர், கல்வி மூலமாகவே தங்களை வளர்த்துக்கொள்ள வேண் டும் என்பதை வலியுறுத்தினார். ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார்.
ஆசிரியர், இதழியலாளர், எழுத்தாளர், சமூகநீதிப் போராளி என பன்முகப் பரிமாணம் கொண்ட பி.ஆர். அம்பேத்கர் 1948- ஆம் ஆண்டிலிருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும், கண்பார்வை குறைந்ததாலும் 1954 ஜூன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்க நேர்ந்தது. 1955-ஆம் ஆண்டில் இவரது உடல்நலம் மேலும் மோசமடைய புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய மூன்று நாட்களுக்குப் பிறகு 65-வது வயதில் 1956 டிசம்பர் 6-ந் தேதி டில்லியிலுள்ள அவரது வீட்டில் தூக்கத்தில் உயிர் நீர்த்தார்.
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 70-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கருக்கு புகழாரம் செலுத்தி வருகின்றனர். இதனையோட்டி அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.
மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி. அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்! என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.