அண்ணாமலை ஒரு சந்தர்ப்பவாதி போல மாற்றி மாற்றி பேசக் கூடாது, நீட் தேர்வின் போது தாலியை கூட கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுத வேண்டும் என்று சொன்ன போது அண்ணாமலை அமைதி காத்தது ஏன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரியில் நடந்த கோயில் விழா ஒன்றில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், ஒரு பெண் பொட்டு வைத்து கொண்டு பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றால், அந்த பெண் எப்படி சனாதன தர்மத்தை காப்பாற்றுவார். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் திருநீறு வைத்து கொள்ள வேண்டும், ருத்ராட்சம் போட்டு கொள்ள வேண்டும் என்று பேசி இருந்தார்.
இந்த அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி கொடுத்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்ட கல்வித் துறை சார்பாக ‘கற்றல் அடைவு’ குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கல்வித்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று கேட்டறிந்தார்.
இதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார். அப்போது, பள்ளியில் என்னென்ன செய்யப் போகிறோம். என்னென்ன பாடப்பிரிவுகளில் பின் தங்கியுள்ளோம், அதனை எவ்வாறு சரி செய்யப் போகிறோம் என்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தனியாக ரிப்போர்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரை பொறுத்தவரை சூலூர் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பள்ளிகள் பின் தங்கி இருக்கின்றன. ஹைடெக் லேப் டெண்டர் பணிகளை பைனான்ஸ் பிரிவு சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் எஸ்எஸ்ஏ திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை. தமிழக அரசு முதல் தவணையாக ரூ.700 கோடி ஒதுக்கி இருக்கிறது. மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு வழக்கு போடப்படும் என்று கூறினார். தொடர்ந்து அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவருக்கும் மதம் சார்ந்த நம்பிக்கை உள்ளது.
அதில் யாரின் தலையிடும் இருக்க கூடாது. பள்ளி என்பது அனைவருக்கும் பொதுவான இடம். பள்ளிகளில் அறிவுசார்ந்த விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும் என்பதே அறிவுரையாக இருக்க வேண்டும். அதனை விடுத்து இதுபோன்ற விஷயங்களை பிற்போக்குதனம் என்று தான் கூறுவேன். மத நம்பிக்கைகளில் யாரும் தடையிடக் கூடாது.
ஆனால் பள்ளிகளில் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். மதம் சார்ந்து அவ்வாறு செய்கிறோம் என்று கூறினால், நீட் தேர்வு எழுதும் போது தாலியை கூட கழற்றி வைத்துவிட்டு எழுதுங்கள் என்று கூறுகிறார்களே.. அப்போது அண்ணாமலை பேசுவாரா? அங்குன்றும், இங்கொன்றும் பேசக் கூடாது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.