பழனிசாமி என்னமோ கடை வைத்து இருக்கின்ற மாதிரி, ராயப்பேட்டை அலுவலகம் முன்பு அம்மா, எம்ஜிஆர் படத்தை காண்பித்து கூட்டணிக்கு வாங்க வாங்க என்ற கூவி அழைத்து வருவது அதிமுகவை பலவீனப்படுத்துகிறது என TTV. தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் TTV. தினகரன் இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, விஜய்யை வா.. வா.. என்று கூவி பார்த்தார்கள்.. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்றால் திமுக தவெகவை அழித்துவிடும், தவெகவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தி பார்த்தார்கள். பவன் கல்யாண், சிரஞ்சிவீயை சொல்லியும் பயமுறுத்தி பார்த்தார்கள். ஆனால் விஜய் பொறுமையாக இருந்து பதில் அளித்தார். விஜய் தெளிவான தனது நிலைப்பாட்டை அறிவித்த பிறகு ச்சீ..ச்சீ.. இந்த பழம் புளிக்கும் என்ற விரக்தியின் உச்சத்திற்கு சென்று இப்படி பேசுகிறார்கள். உண்மை என்றைக்கும் கசக்கத்தான் செய்யும். துரோகம் என்றைக்கும் அதன் வேலையை காட்டும். MGR 1972 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த பிறகு தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருந்தார்.
இதேபோன்று ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பு ஏற்றப்போதும் தொடர்ந்து அவர் ஆட்சி செய்தார். 1991 -ஆம் ஆண்டில் இருந்து ஜெயலலிதா ஆட்சி செய்தார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த இயக்கம் தான் அதிமுக. தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மற்றவர்கள் தேடி வந்து பார்த்து இருப்போம்.. கூட்டணி கட்சிகள் அவர்களை தேடி வந்தார்கள். ஆனால் இன்றைக்கு பார்த்தோம் என்றால் இவர்கள் கூட்டணிக்கு கட்சிகளை கூவி கூவி அழைக்கிறார்கள். இவர்கள் என்னமோ கடை வைத்து இருக்கின்ற மாதிரி, ராயப்பேட்டை அலுவலகம் முன்பு அம்மா, எம்ஜிஆர் படத்தை காண்பித்து கூட்டணிக்கு வாங்க வாங்க என்ற கூவி அழைத்து வருவது போல் செய்கிறார்கள். இது எல்லாம் அதிமுக பலவீனமாகிவிட்டது என்பதற்கு உதாரணம். இதை சொன்னால் என் மீது கோபம் கொள்கிறார்கள்.
அன்றைக்கு கூட நான் சொன்னது, கொடநாடு வழக்கில் அவர்களை சம்பந்தப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை. கொடநாட்டில், அங்கே நகைகள், பணம் எதும் இருக்காது என தெரிந்தும், அங்கே கொலை, தற்கொலை என தொடர் கொலைகள் எல்லாம் நடந்திருக்கும். பழனிசாமி ஆட்சியில் இருந்த போது தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வந்தது. இதை தான் சொன்னோம். அரசு ரெக்கார்டை இவர் அழித்துவிட்டார் என பல யூடியூப்களில் போட்டனர்.
அரசு ரெக்கார்டு எல்லாம் கிடையாது. கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் எல்லாருமே யாரு.. அவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அம்மா அவர்கள் விசாரிப்பார்கள். அது அந்த பச்சை கலர் பைலில் இருக்கும் என்று சொன்னேன்.. உடனே இவர்கள் அரசு ரெக்கார்டு.. அம்மா இருக்கும் போது பார்த்தாரா.. அம்மா மறைவுக்கு பிறகு பார்த்தாரா என பல்வேறு விதமாக செய்திகளை பரப்பிவிட்டனர். இது சட்டத்துக்கு விரோதமானது என்று.
அரசு ரெக்கார்டு என்றால் இன்னொரு காப்பி எப்படியும் அரசிடம் இருக்கும். ஆனால் இது அது இல்லை. நாங்க இதையெல்லாம் போய் கிழிக்கவில்லை. அம்மா அவர்களுக்கு கட்சியில் இருக்கின்ற நிர்வாகிகள் மீது, கட்சியில் உள்ளவர்கள், வெளியில் உள்ளவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் அந்த பச்சை கலர் பைலில் இருக்கும். பிரைவேட்டாக வரும் அந்த ரிப்போர்கள் தான் அங்கு இருக்கும். சின்னம்மா சொன்னது எல்லாம், அதிமுக ஓரணியில் இணையவேண்டும் என்பது தான் என TTV. தினகரன் தெரிவித்தார்.