ரியல் எஸ்டேட் அதிபருடன் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கள்ளக்காதலி மகன் கண்முன்னே பெண் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுவாதிக்கு, திருமணமாகி கணவரும், 2 மகன்களும் உள்ளார்கள். சுவாதி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, துண்டிகல் என்ற இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கிஷன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
தொழில் அதிபர் கிஷனுக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். சுவாதியின் ஒரு மகன் விடுதியில் தங்கி படித்து வந்தான். மற்றொரு மகன் அவருடன் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். ஒருகட்டத்தில் கிஷனுக்கும், சுவாதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளின் வாடகையையும் வாங்கி சுவாதிக்கு கிஷான் செலவு செய்து வந்த நிலையில் ரியல் எஸ்டேட் அதிபரின் குடும்பத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியது.
எனவே சுவாதியை தீர்த்துக்கட்ட கிஷனின் சகோதரி மகன் ராஜேஷ் என்பவர் திட்டமிட்டார். நேற்று முன்தினம் சுவாதியும், அவரது இளைய மகனும் வீட்டில் இருந்துள்ளார்கள். அப்போது திடீரென உள்ளே நுழைந்த ராஜேஷ் தனது நண்பர் வம்சி என்பவருடன் சேர்ந்து மகன் கண்முன்னே சுவாதியை கழுத்தை அறுத்துக் கொன்றனர். பின்னர் ராஜேஷ் மட்டும் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வம்சியை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.