சென்னை SPA-க்களில் ஜோராக நடந்த விபச்சாரம்..!

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புற்றீசல் போல் மசாஜ் சென்டர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதும் காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபடுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கியமான இடங்களுக்கு வேலை தேடி செல்லும் அப்பாவி பெண்களும் மற்றும் சென்னைக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்பு தேடி செல்லும் பெண்கள் பலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களின் எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, கிராமப்புறங்களில் இருந்து வேலை தேடி நகர்ப்புறத்துக்கு வரும் இளபெண்கள் சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக சொன்னதை கேட்டு வரும் பெண்கள், குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களால் மசாஜ் சென்டர்களில் வந்து சிக்கி கொள்கிறார்கள். அத்துடன், அவர்களின் மூளை சலவை செய்யப்பட்டு ஆசைவார்த்தைகளுக்கு ஏமாந்துபோய்,சொந்த ஊர் திரும்பி செல்ல முடியாமல் தவித்து வரும், எத்தனையோ அப்பாவி பெண்களை காவல்துறை பாதுகாப்பாக மீட்டும் வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில், “சென்னை பெருநகர காவல், அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படையினர் ஜனவரி 21-ஆம் தேதி அண்ணாநகர் மேற்கு பகுதியிலுள்ள ஒரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மேற்படி ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரின் உரிமையாளர் திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி பிரேமா என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட பிரேமா விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 3 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

சென்னையில் திடீரென முளைத்த போஸ்டர்களால் பரபரப்பு…!

“அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற போஸ்டர்கள் தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே சினிமா, அரசியல் மற்றும் மக்களின் பொது நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் போஸ்டர் கலாசாரம் மக்களோடு மக்களாக இரண்டற கலந்த ஒன்றாகும்.

அதிலும் குறிப்பாக அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க போஸ்டர்கள் ஒட்டுகின்றனர். அப்படி, ஒரு போஸ்டர் தான் இன்று தமிழகத்தில் தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டு தமிழக அரசியல் களத்தையே பரபரப்பாக்கி உள்ளது.

“அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை, மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற வாசகங்களுடன், வேறு எந்தக் குறிப்பும் இன்றி சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், இதனை யார் வடிவமைத்தது, எந்தக் கட்சிப் பொறுப்பாளர் என எந்த விவரங்களும் இல்லை. இந்த போஸ்டரை பலரும் பார்த்து, இந்த போஸ்டரில் குறிப்பிடப்படுவது யாராக இருக்கும் என கேள்வி எழுப்பி விவாதித்து வருகின்றனர். அரசியல் ரீதியான போஸ்டர் தானா? அல்லது வேறு எதும் விளம்பரமா? என்றும் தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதற்கிடையே பெரியார் பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய வரும் நிலையில், சீமானுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரம் அடைந்துள்ளன.

இப்படியான சூழலில், பெயர் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளன. கட்சிக்கார்களா? அல்லது எதிர்க்கட்சியினரா? இந்த போஸ்டர்களை யார் ஒட்டியது என தெரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலையில் இந்து மக்கள் கட்சியினர் கைது..!

சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். கனடா நாட்டில் கோயில் மீதும், இந்து பக்தர்கள் மீதும் காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் எதிரில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

இதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில், நிர்வாகிகள் அங்கு வரத் தொடங்கினர். அப்போது, காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தி, தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய இருந்ததாக கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைத்தனர்.

போதை ஏறிப்போச்சு புத்தி மாறி போச்சு..! காலி செய்து விடுவேன்…!

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் காவல்துறை நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்துள்ளனர். இதைப்பார்த்த காவல்துறை, காரை எடுக்கும்படி காருக்குள் இருந்த இருவரிடமும் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அதில், ‘நீங்கள் யார்?’ என்று அந்த ஆண் – பெண்ணிடம் காவல்துறை கேட்டதும், ஒரு பொம்பள இன்ஸ்பெக்டர் எப்படி வணக்கம் போடுவா தெரியுமா..? மூஞ்ச பாரு வையாபுரி மூஞ்சி என இருவரும் போஸ் கொடுத்து கிண்டல் செய்தனர். மேலும் அந்த ஆண், “நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பார்க்கிறாயா?” என காவல்துறையினரை மிரட்டும் தொணியில் பேசி கேலியும் கிண்டலும் செய்துள்ளார். தொடர்ந்து “உன்னால் முடிந்ததை பாரு” என மிரட்டல் விடுத்த அந்த நபர், “நான் குடித்துதான் இருக்கிறேன்.

என்னால் வண்டியை எடுக்க முடியாது. நாளைக்கு காலையில டிபன் சாப்பிட மாட்ட, நாளை காலை உங்க முகவரி எல்லாத்தையும் எடுத்து உங்களை காலி செய்து விடுவேன்” எனக்கூறியதோடு காரை வட்டமிட்டபடி எடுத்துச் சென்றார். இந்த ரோந்து காவல்துறையினரை மிக இழிவாக பேசிய அந்த இருவரும், அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த இருவரும் கணவன் மனைவி இல்லை என்பது தெரியவந்துள்ளது.

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க தடையை மீறியதாக சுற்றுலாத்துறை செயலர் ஆஜராக உத்தரவு..!

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக கூறி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், ‘‘யாருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை என கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு, அக்டோபர் 14-ஆம் தேதியே டெண்டர் வழங்கப்பட்டு விட்டதாகவும், அக்டோபர் 10-ஆம் தேதியே அதற்கான தொகை பெறப்பட்டு விட்டதாகவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது’’ என வாதிட்டார்.

அப்போது பேசிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஏற்கெனவே டெண்டர் வழங்கப்பட்டு, பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறுக்கிட்ட நீதிபதி, ‘‘அப்படியென்றால் டெண்டர் இன்னும் வழங்கப்படவில்லை என ஏன் நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடைகளை அமைக்க முடியாதா’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘காரணமின்றி அரசை குறை கூறக்கூடாது. அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது’’ என தெரிவித்தார். அப்போது, நீதிபதி, பட்டாசு விற்பனை மூலமாக தனிநபர்களுக்கு செல்லும் வருமானம் அரசுக்கு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் தானும் பேசுவதாக தெரிவித்தார். மேலும், அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத்துறை செயலர், சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

சென்னையில் மூன்றே நாட்களில் 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

சென்னை கனமழை எதிரொலி சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி கடந்த மூன்று நாட்களில் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 14-ஆம் தேதி 4,967 மெட்ரிக் டன், 15-ஆம் தேதி 4,585 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. அதபோல், சென்னையில் 16-ஆம் தேதி 4,941 மெட்ரிக் டன் குப்பைகள் என மொத்தம் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில்  36 நிவாரண மையங்களில் 1,360 பேர் தங்கவைப்பு..!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாறான கனமழை பெய்யாத நிலையில் ஆங்காங்கே லேசான மழையே பெய்தது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 131 மி.மீ. மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த 67 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1360 நபர்கள் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 98 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. நேற்று (அக்.15) காலை உணவு 1000 நபர்களுக்கும், மதிய உணவு 45,250 நபர்களுக்கும், இரவு உணவு 2,71,685 நபர்களுக்கும் வழங்கப்பட்டதோடு, இன்று காலை உணவு 4,16,000 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரி ன் உத்தரவின்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 412 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளததோடு, மீதமுள்ள இடங்களிலும் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 6120 அழைப்புகள் வந்துள்ளன. இதன்மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில பேரிடர் மீட்புக்குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 8 குழுவினர் தயாநிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மணலி, எழும்பூர், செனாய் நகர் மற்றும் பள்ளிக்கரணையிலும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் செனாய் நகர்-2, வில்லிவாக்கம் மற்றும் ராஜரத்தினம் அரங்கத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில பேரிடர் மீட்புக்குழுவைச் சார்ந்த 80 வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சார்ந்த 100 வீரர்கள், மீட்புப் படகு, இயந்திர ரம்பம், ஸ்டெக்சர் உள்ளிட்ட மீட்பு கருவிகளுடனும், சென்னையில் 103 படகுகளுடனும் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். மழைக்காலத்தினை முன்னிட்டு, பொது சுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் நாள்தோறும் 100 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்தின் 73 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், மற்ற மாநகராட்சி, நகராட்சி, மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 89 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும் டீசில்டிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் 240 பேர் மயக்கம்..! சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு..!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் கார்த்திகேயன், தினேஷ்குமார், ஜான் பாபு, சீனிவாசன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை போக்குவரத்தில் மாற்றங்கள் செய்திருந்தனர். குறிப்பாக மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வேறு சாலைகளை பயன்படுத்த காவல்துறை அறிவுறுத்தியிருந்தனர். ஆனாலும், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே போக்குவரத்து நெரிசல் படிப்படியாக உயர்ந்தது. 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிந்தது. அதன்பின், ஒரே நேரத்தில் பொதுமக்கள் கிளம்பியதால் மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே, ஐஸ்அவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர். உட்புற சாலைகளை பயன்படுத்தலாம் என சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின. தொடர் வாகன நெரிசலால் அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், பாரிமுனை என மொத்தத்தில் சென்னையே வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது.

ரயில்கள், பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த மக்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் ‘மோசமான ஏற்பாடு’ என்று தலைப்பிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ‘டேக்’ செய்து பலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

Formula 4: சென்னையில் மாலை நடைபெற இருந்த கார் பந்தயம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம்..!

தெற்காசியாவிலேயே முதல் முறையாக 6 அணிகள் பங்கேற்கின்றன. 3.5 கிமீ தூரம் கொண்ட கார் பந்தயம் சென்னையில் இன்றிரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன. இந்தியாவில் பார்முலா-4 இரவு நேர தெரு கார் பந்தயம் நடப்பது இதுவே முதல் முறையாகும். உலகளவில் இந்த பந்தயத்தை நடத்தும் 15-வது நகரம் என்ற பெருமை சென்னைக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் மாலை நடைபெற இருந்த கார் பந்தயம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தய நேரம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த தகவல்,“தொழில்நுட்பக் கோளாறுகளால் சென்னையில் நடைபெறும் இந்திய பந்தய விழாவில் இன்றைய நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படும் என்பதை எங்கள் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். சுற்றியுள்ள எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இதைத் தீர்க்க நாங்கள் விடாமுயற்சியுடன் செயல்படுகிறோம்.

அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை நாங்கள் உறுதி செய்வதால் உங்கள் பொறுமை மற்றும் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை மாலை 5 மணிக்குள் பகிர்வோம், காத்திருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு தயக்கத்துடன் சென்றேன்..! இறுதியில் தமிழ்நாட்டின் மீது காதல் கொண்டேன்..!!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சஞ்சய் கிஷன் கவுல் வருகிற டிசம்பர் 25-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை முதல் உச்ச நீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை என்பதால் நேற்று அவரது கடைசி பணி நாளாக அமைந்தது. இதை முன்னிட்டு உச்ச நீதிமன்ற பார் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசுகையில், நீதிமன்றங்கள் நீதியின் கோவில்கள் என்று நான் எப்போதும் நம்புகிறேன். மேலும் அவை எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டுவதற்கு வழக்குதாரர்களுக்கு திறந்திருக்க வேண்டும். வழக்காடுபவர்கள் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கிறார்கள். கடைசி முயற்சியாக இருக்கும் இந்த உச்ச நீதிமன்றத்தை அவர்கள் அடையும் நேரத்தில் அது திறந்து இருக்க வேண்டும்.

நீதி கிடைப்பது எல்லா நேரங்களிலும் தடையின்றி இருப்பது உச்ச நீதிமன்றத்தின் பெருமையாகும். தங்கள் தகராறுகளைத் தீர்ப்பதற்காக இந்த நீதிமன்றத்தை அணுகிய வழக்குரைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நீதி வழங்கும்போது நம் மனதில் முதன்மையாக இருக்க வேண்டும்.

ஒரு வழக்குரைஞர் தனது வழக்கின் முடிவை அறிய காலவரையின்றி காத்திருக்க வைக்கக்கூடாது என நான் நம்புகிறேன். நீதிபதியாக பெரும்பாலும் சரியான முடிவு கண்டுபிடிக்கப்படுவது இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சிறந்த முடிவு மட்டுமே உள்ளது. ஒரு முடிவெடுப்பதற்கு உங்களுக்குள் தைரியத்தையும் நம்பிக்கையையும் கண்டுபிடிக்க வேண்டும். ஒருமுறை நீங்கள் முடிவு செய்தால், திரும்பிப் பார்க்காதீர்கள். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்ட செய்தியை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி இல்லை.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நான் பணியாற்றிய காலம் எனது நீதித்துறை வாழ்க்கையின் மிகவும் நிறைவான காலமாக அமைந்தது,. தமிழ்நாட்டு மக்களின் பொதுவான மனப்பான்மை மிகுந்த பணிவு மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது. நான் தயக்கத்துடன் சென்னைக்குச் சென்றேன். ஆனால் இறுதியில் தமிழ்நாட்டின் மீது காதல் கொண்டேன். அங்கு நான் மிகவும் நீடித்த நட்பைக் கண்டேன். அதை இன்றும் நான் தொடர்ந்து போற்றி வருகிறேன். இவ்வாறு சஞ்சய் கிஷன் கவுல் உருக்கமாக பேசினார்.