நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, எண்ணூர் அருகே உள்ள எர்ணாவூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அந்த பைக் இளைஞரின் நண்பருடையது என்று தெரிகிறது.
எர்ணாவூர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டு இருந்தபோது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த எண்ணூர் காவலர்கள் இருவர், இளைஞரின் பைக்கில் அந்த பைக் நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பதை கவனித்தனர். உடனே இளைஞரை தடுத்து நிறுத்தி, பைக்கில் நம்பர் பிளேட் எங்கே என்று கேட்டனர்.. அதற்கு அந்த இளைஞர், “இது என் ஃபிரெண்ட் பைக்” என்று பதிலளித்தார்.
எனினும், இதை நம்பாத காவலர்கள், “அப்படியானால், உங்கள் ஃபிரெண்டையும் அழைத்துக் கொண்டு, இந்த பைக்கின் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, காவல் நிலையத்திற்கு வந்துடுங்க” என்றனர்.. அத்துடன், இளைஞர் ஓட்டி வந்த பைக்கையும் பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்கு எடுத்து செல்ல முயன்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர், “வண்டி ரிக்கார்டு எடுத்துட்டு என் ஃபிரெண்டை இங்கே வர சொல்கிறேன், அதுக்காக காவல் நிலையத்திற்கு எதுக்கு நாங்கள் வரணும் அண்ணா? காவல் நிலையத்திற்கு ஃபிரெண்டை கூட்டிட்டு வர முடியாது.. நீங்க இங்கியே நில்லுங்கண்ணா, தப்பே பண்ணாமல் என்னை புடிச்சி வெச்சிட்டு இருக்கீங்க” என்று சொல்லி பைக்கை காவல் நிலையத்திற்கு எடுத்து செல்ல விடாமல் தடுத்தார்..
அதற்கு காவலர்கள், “தம்பி வழிவிடு, நல்லதனமாக சொல்கிறோம்.. இந்த பைக்கில் நம்பர் பிளேட் இல்லை, அதனால்தான் காவல் நிலையத்திற்கு வரச் சொல்கிறோம்” என்றனர்.. உடனே இளைஞர், வண்டியை இங்கேதானே பிடிச்சீங்க? அப்ப இங்கியே விசாரணை நடத்துங்க.. வண்டி ரிக்கார்டுகளை எல்லாம் என் ஃபிரண்டு இங்கே எடுத்துட்டு வந்துட்டு இருக்கான், இங்கியே விசாரிங்க.. காவல் நிலையத்திற்கு கூப்பிடறீங்களே எதுக்கு? சும்மாவே எங்க மேல ஃபைன் போடறதுக்கா?” என்று காவல்துறையினரிடம் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த இரண்டு காவலர் ஒருவர், திடீரென அந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதை எதிர்த்தும் அந்த இளைஞர் தொடர்ந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து, “அம்மா, என் ஃபிரண்டு பைக்குல வந்துட்டு இருந்தேன். இங்கே போலீஸ்காரங்க என்னை பிடிச்சு அடிக்கிறாங்க” என்று முறையிட்டார். பிறகு போலீசாரிடம் “என்னை அடிச்சுக்குங்க-ண்ணா, ஆனால், வண்டியை பிடிச்சது இங்கேதான், அதனால் இங்கே விசாரணை பண்ணுங்க., காவல் நிலையத்திற்கு ஏன் வரணும்? என்று கேட்டபடியே இருந்தார். இந்த சம்பவம் நடப்பதை அங்கிருந்த பொதுமக்களில் சிலர் தங்கள் அலைபேசியில் இதை வீடியோவாக பதிவு செய்தனர்.
இதற்கு பிறகு, இளைஞரின் நண்பர் அதாவது பைக்கின் ஓனர், காவல் நிலையத்திற்கு சென்று, பைக்கின் ஆவணங்களை காட்டியதுடன், நம்பர் பிளேட் பொருத்தாததற்கு மன்னிப்பு கோரினார். இதையடுத்து, காவலர் அந்த பைக்கை நண்பரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, காவலர் இளைஞரை கன்னத்தில் அறைந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. நம்பர் பிளேட் இல்லாவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கலாம், பைக்கை பறிமுதல் செய்யலாம், அதற்காக இளைஞரை கன்னத்தில் எதுக்கு அறைய வேண்டும்? என்று இணையவாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.