சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முன்னாள் காவலர் ஒருவர் ஆதரவற்ற முதியவர் ஒருவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்து ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
உத்தரப் பிரதேச காவல் துறையில் காவலராகப் பணியாற்றியவர் ராம்வீர் சிங். ஆனால், இவரது நடத்தை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாகவும் கடந்த 2013-ஆம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இவரது மீது குண்டர் தடுப்புச் சட்டம் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் அடிபட்டது. இதனால் சிறைக்குச் செல்ல நேரிடும் எனப் பயந்த ராம்வீர் தலைமறைவானார்.
சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கத் தான் இறந்துவிட்டதாக ஒரு நாடகத்தை அரங்கேற்ற அவர் முடிவு செய்தார். ஹத்ராஸ் ரயில் நிலைய நடைமேடையில் ஆதரவற்ற முதியவர் ஒருவர் நீண்ட நாட்களாக வசித்து வந்தார். யாரும் இல்லாத அந்த முதியவரைத் தனது திட்டத்திற்காக ராம்வீர் சிங் கடந்த சில நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளார்.
கடந்த மார்ச் 12-ந் தேதி நள்ளிரவு, அந்த முதியவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ராம்வீர் சிங் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தார். அந்த சடலம் ராம்வீர் சிங் தான் என காவல்துறையினரை நம்ப வைக்க முதியவரின் சடலம் பாதி எரிந்த நிலையில், அருகில் ராம்வீர் சிங்கின் ஆதார் அட்டை மற்றும் செல்போனை வேண்டுமென்றே போட்டுவிட்டுச் சென்றார்.
ஆனால், முதியவரை எரிக்கும்போது ராம்வீர் சிங்கிற்கும் எதிர்பாராத விதமாகத் தீக்காயங்கள் ஏற்பட்டன. இதனால் வலி தாள முடியாமல் அவர் ஹத்ராஸ் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக எட்வா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில், எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்ட காவல்துறையினர், அது ராம்வீர் சிங்கின் தான் என முதலில் நினைத்தனர்.
ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் வழக்கமாக இருக்கும் முதியவரைக் காணவில்லை எனப் புகார் அளித்தனர். இது காவல்துறையினருக்குப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், எட்வா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது ராம்வீர் சிங் என்பது உறுதி செய்யப்பட்டது. உயிருடன் பிடிபட்ட ராம்வீர் சிங், தான் செய்த கொடூரக் கொலையை ஒப்புக்கொண்டார். சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க ஆதரவற்ற முதியவர் ஒருவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்து ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.