சென்னையில் பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராஜலட்சுமி வருமானத்திற்கு அதிகமாக 5.42 கோடி சொத்து குவித்ததாக பெண் காவல் ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராஜலட்சுமி என்பவர் திருமங்கலம், வெல்கம் காலனியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் பணியின்போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடாக அதிகளவில் பணம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை அடிப்படையாக வைத்து கடந்த 13-ந் தேதி இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. பெண் காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “கடந்த 1999- -ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக ராஜலட்சுமி காவல் துறையில் பணியில் சேர்ந்தார். 2010-ஆம் ஆண்டு முதல் சென்னையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு போன்ற முக்கிய பிரிவுகளில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.
அவரது பணி காலத்தில் ராஜலட்சுமி மீது பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் இவரை பற்றி ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ராஜலட்சுமியின் வரவு – செலவுகளை ஆய்வு செய்ததில், அவர் தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது.
அதன்படி, 2017-ஆம் ஆண்டு ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 310ஆக இருந்த நிலையில், 2025 ஜூன் மாதம் ரூ.4.62 கோடியாக உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சேமிப்பாக சுமார் 80 லட்ச ரூபாய் வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதாவது, தனது அதிகாரப்பூர்வ வருமானத்தை விட 372 % கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக அவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.