நான் ஆட்சிக்கு வந்தால் மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை பணியில் அமர்த்துவேன் என்று கூறி விஜய் ஆட்சிக்கு வந்தார். இப்படி இருக்கையில், சென்னை கண்ணகி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் இளம்பெண்ணுக்கு கருவில் குழந்தை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த மெர்சி என்ற கர்ப்பிணிப் பெண், நேற்று காலை 11 மணியளவில் கடுமையான வயிற்று வலியுடன் கண்ணகி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பெண் வலியால் துடித்துள்ளார். பின்னர், அங்கிருந்த ஊழியர்கள் அவரை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், உறவினர்கள் அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர். கரு கலைப்பு மற்றும் கவலைக்கிடமான நிலை திருவல்லிக்கேணி மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், நீண்ட நேர தாமதத்தால் கருவிலேயே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், மெர்சியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலறிந்த கண்ணகி நகர் குடியிருப்பாளர்கள் மற்றும் ‘அறப்போர் இயக்கம்’ போன்ற அமைப்பினர் நேற்று இரவு மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 மணி நேரமும் மகப்பேறு சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறப்படும் இந்த மையத்தில், அவசர காலங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் இங்கு நடந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், காவல்துறையினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இருப்பார்கள் என்று தவெக வாக்குறுதியளித்திருந்தது. ஆனால், சென்னை போன்ற பெருநகரத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.