திருப்பூர் மாவட்டம், ஓட்ட சமுத்திரம் புறவழிச்சாலையில் உள்ள சலக்கரை அருகே சரவணகுமார் என்பவர் கடந்த 15-ஆம் தேதி தைப்பொங்கல் இரவு 8 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், அலைபேசியை பறித்து தப்பி ஓடினர். இதுதொடர்பாக மூலனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் அவர்களின் உத்தரவுப்படி , குற்றவாளியை கைது செய்யும் பொருட்டு தாராபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் S. சுரேஷ்குமார் அவர்களின் மேற்பார்வையில், மூலனூர் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் அவர்களின் தலைமையில், உதவி ஆய்வாளர் பாலமுருகன், தலைமை காவலர்கள் ரமேஷ்குமார், கலைச்செல்வன் ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட சைபர் கிரைம் மற்றும் கணியூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் துப்பு துலக்கப்பட்டது. மேலும் 100 மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்ட போது திருப்பூர் மாவட்டம், கணியூர், காரத்தொழுவு, உடையார்பாளையத்தை சேர்ந்த மனோஜ் மற்றும் தாராபுரம், மூலனூரை அடுத்த எலுகாம்வலசுவை சேர்ந்த சவுரிஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், இருவரும் பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவர இவர்களிடம் இருந்து ஒரு அலைபேசி மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் மனோஜ் மீது கணியூர், தாராபுரம், மூலனூர் ஆகிய காவல் நிலையங்களில் 9 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் இன்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.