தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் கவாடிகுடா பகுதியிலுள்ள அழகு நிலையம் ஒன்றில் பங்கி டெபோரா என்பவர் பியூட்டிஷியனாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று தனது வழக்கமான பணியில் இருந்தபோது, அவரது கணவர் ஆட்டோ ஓட்டுனரான ராஜு என்பவர் திடீரென உள்ளே புகுந்தார்.
ராஜு, கையில் கூர்மையான கத்தியுடன் மிகவும் ஆக்ரோஷமாக வந்தார். ஆனால் அழகு நிலையம் ஊழியர்கள் உஷாராவதற்குள், பங்கி டெபோராவை ஒரு மூலையில் மடக்கிய ராஜு, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பங்கி டெபோராவை சரமாரியாகக் குத்தினார். அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து பார்த்துக் கொண்டிருக்க, பலத்த காயமடைந்த பங்கி டெபோரா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது இந்த வெறிச்செயலை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், பங்கி டெபோரா மற்றும் ராஜு இடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. மனைவியின் நடத்தையில் ராஜு சந்தேகம் அடைந்திருந்ததே இந்த கொடூரக் கொலைக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவாக உள்ள ராஜுவை பிடிக்க தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.