மதிமுக எம்எல்ஏக்கள் இருவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் என முதல்வர் விஜய் பேசியதாக வைகோ பட்டவர்த்தனமாக பேசியிருக்கிறார். ஆகையால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை காவல்துறை எப்போது கைது செய்யும். ராஜினாமா செய்ய சொன்ன முதல்வர் விஜய் மீது எப்போது எப்ஐஆர் பதிவு செய்யப் போகிறது? என பனையூர் மு.பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, பனையூர் மு.பாபு தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டில் தற்போது மக்கள் கூறுவதுபோல் தற்குறி ஆட்சி நடப்பதால் எப்போதும் நடைபெறாத சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா ஆளுங்கட்சியின் தூண்டுதலில் சர்வ சாதாரணமாக செய்யப்பட்டு வருகிறது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்க பேரம் பேசியதாக கூறி ஒருசிலரை கைது செய்ததோடு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசு சுமத்தியிருக்கிறது.
ஊத்தங்கரை எம்எல்ஏ ராஜினாமாவும் செய்யவில்லை, தவெக ஆட்சிக்கு எதிராகவும் திரும்பவில்லை. ஆனாலும், திராவிட முன்னேற்றக்கழகம் மீது அவதூறு பரப்பும் ஒரே நோக்கில் தவெக செயல்படுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்எல்ஏவான மன்னார்குடி எஸ்.காமராஜ் தற்போது தவெக கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரிடம் டீல் பேசி தவெகவினர் பதவியை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள்.
இதுபோக, திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுக எம்எல்ஏக்கள் இருவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் என முதல்வர் விஜய் பேசியதாக வைகோ பட்டவர்த்தனமாக பேசியிருக்கிறார். அதேநேரம், எங்கள் எம்எல்ஏக்களை நானே ராஜினாமா செய்ய சொன்னேன் என்றும் வைகோ வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். திமுக முக்கிய பிரமுகர்கள் மீது அவதூறு பரப்ப துடிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை காவல்துறை எப்போது கைது செய்யும். ராஜினாமா செய்ய சொன்ன முதல்வர் விஜய் மீது எப்போது எப்ஐஆர் பதிவு செய்யப் போகிறது? என பனையூர் மு.பாபு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.