மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த கோர படகு விபத்தில் இயற்கை சீற்றத்தோடு மனிதர்களின் அலட்சியமும் சேர்ந்துகொண்டதால், தற்போது பலி எண்ணிக்கை 10 ஆக உயர இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. மரணத்திலும் பிரியாத ஒரு தாயின் பாசப் போராட்டம், மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களை கண்ணீர் விட வைத்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணையில் படகில் 41 பேர் சவாரி செய்த போது மாலை 6 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் அலைகள் கொந்தளிப்பாகி உள்ளது. அதிலும் படகு செல்ல செல்ல வானிலை மேலும் மேலும் மோசமாகி உள்ளது. இந்நிலையில் ஏற்பட்ட படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 நபர்கள் உட்பட 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 41 பேரில் 28 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துயர சம்பவத்தின் மிகக் கொடுமையான காட்சி, டெல்லியிலிருந்து சுற்றுலா வந்த ஒரு தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டபோது அரங்கேறியது. அந்தத் தாய்க்கும் அவரது 4 வயது மகனுக்கும் சேர்த்து ஒரே ஒரு உயிர்க்கவசம் மட்டுமே ஊழியர்களால் வழங்கப்பட்டிருந்தது. மரண பயம் சூழ்ந்த அந்த நொடியில், தன் மகனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தவிப்பில், அந்தத் தாய் தனது உயிர்க்கவசத்திற்குள்ளேயே மகனை வைத்து இறுக அணைத்துக் கொண்டு தண்ணீரில் போராடியுள்ளார். ஆனால், அந்தப் பாசப் போராட்டமே அவர்களுக்குப் பெரிய சிக்கலாக மாறி, இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர்.
விபத்து நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டபோது, உயிரிழந்த பிறகும் கூட அந்தத் தாய் தனது மகனை நெஞ்சோடு அணைத்தபடியே இருந்தார். மகனுக்குத் தனி உயிர்க்கவசம் வழங்கப்பட்டிருந்தால், அந்தப் பிஞ்சு உயிர் தப்பித்திருக்கும் என்ற உண்மை காண்போரைச் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படகு கவிழ்வதற்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகி காண்போரை நிலைகுலைய வைத்து வருகிறது. அந்த வீடியோக்களில், பயணிகள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது.
அப்போது வானிலை மோசமடைந்து பலத்த காற்று வீசுவதையும் காண முடிகிறது. அதுமட்டுமல்ல, ஒரு பயணி கூட உயிர்க்கவசம் அணிந்திருக்கவில்லை. படகு நிலைதடுமாறி உள்ளே தண்ணீர் புக தொடங்கிய பின்னரே, அங்கிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக உயிர்க்கவசங்களை வழங்கினார்களாம். லைப் ஜாக்கெட் அப்போதே தந்திருந்தால், உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்றும், தாமதமாக வழங்கப்பட்டதுதான் விபத்துக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.