சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கார்த்திகேயன். இவர், கடந்த ஓராண்டுக்கு முன் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அப்புகாரில், எனது செல்போன் வாட்ஸ்-அப் எண் மூலம் இணையவழி வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால் அதிகளவு லாபம் பெறலாம் என்று மர்ம நபர்கள் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி, எனது வங்கி மூலம் அந்நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ரூ.59 லட்சத்தை இணையவழி வர்த்தக முதலீடாக அனுப்பி வைத்தேன்.
பின்னர் பல மாதங்களாகியும் அப்பணத்துக்கான லாபத்தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்திகேயன் வலியுறுத்தியிருந்தார். இப்புகாரின்பேரில் ஆவடி காவல் ஆணையரக இணையவழி மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது, திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த விஜயகார்த்திக், திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடக் மகேந்திரா வங்கி மேலாளராக இருக்கும் மோனிஷ்ராஜ் ஆகிய இருவரும் மோசடி நபர்களிடம் இருந்து அதிகளவு கமிஷன் தொகை பெறுவதற்காக, இணையவழி வர்த்தகம் மூலம் பொதுமக்களின் வங்கி கணக்குகளை பெற்று பணமோசடியில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இணையவழி வர்த்தகம் மூலம் கார்த்திகேயனிடம் ரூ.59 லட்சம் பணமோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் மோனிஷ்ராஜ், விஜயகார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.