தாய் இறந்து விட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று ரூ.34 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக அவரை மகனை கைது செய்தனர். சென்னை கொளத்தூர், மக்காரம் தோட்டம் பகுதியை சேர்ந்த 71 வயதாகும் சுசீலா என்பவருக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். சுசீலாவுக்கு சொந்தமான 2,100 சதுர அடி நிலம் செவ்வாப்பேட்டை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தில் இருக்கிறது.
சுசீலாவின் மகன் அல்போன்ஸ் ராஜ் வீட்டில் இருந்த நிலத்தின் அசல் ஆவணங்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தாய் உயிருடன் இருந்தபோதே அவர் இறந்துவிட்டதாக போலியாக இறப்பு சான்றிதழ் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் உடன்பிறந்தவர்களை மறைத்து, தான் ஒரே வாரிசு என கூறி போலி வாரிசு சான்றிதழ் பெற்று புருஷோத்தமன் என்பவருக்கு பொது அதிகாரம் எழுதி கொடுத்துவிட்டாராம்.
பின்னர் அவர் மூலம் அந்த நிலத்தை 2021-ஆம் ஆண்டு யாருக்கும் தெரிவிக்காமல் முருகேசன் என்பவருக்கு விற்பனை செய்திருக்கிறார். கடந்த 2024-ஆம் ஆண்டு சுசீலா, தனது நிலத்திற்கான வில்லங்க சான்றிதழ் எடுத்துப் பார்த்தபோது நிலம் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந் து இருக்கிறது. இதையடுத்து சுசீலா ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
சென்னை ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில், ஆய்வாளர் ரமணி வழக்குப்பதிவு செய்து தாய் இறந்ததாக போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்ற அல்போன்ஸ் ராஜை கைது செய்தார். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.34 லட்சம் என சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.