கால்நடை துறையில் வேலை வாங்கி தருவதாக, 14 லட்சம் ரூபாய் மோசடி செய்த அரசு ஓட்டுநரை, தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்து பட்டாபிராம், டிரைவர்ஸ் காலனியை சேர்ந்த ரவிகுமார். கடந்த 2022 – 23ல், இவரது மூன்று தம்பிகள் கால்நடைத்துறையில், வேலைக்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில், மாதவரத்தில் உள்ள கால்நடை துறை அலுவலகத்திற்கு ரவிகுமார் சென்றபோது, அரசு ஓட்டுநராக பணி புரியும், பால்பண்ணையைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.
இதையடுத்து நாகராஜன், கால்நடைத்துறையில் தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும், அவர்களிடம் பேசி வேலை வாங்கி தருவதாக ரவிக்குமாரிடம் கூறி பல்வேறு தவணைகளாக ரூ.14 லட்சத்து 49 ஆயிரத்தை பெற்று இருக்கிறார். பின்னர் போலியான பணி ஆணை நகலை ரவிக்குமாரிடம் கொடுத்து இருக்கிறார். அப்போது, அசல் ஆவணத்தை கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். அதனால் சந்தேகம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அதை எடுத்துக்கொண்டு மாதவரம் கால்நடை துறை அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டதை ரவிக்குமார் உணர்ந்துள்ளார். இது குறித்து அவர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் அளித்த புகாரின்போரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாகராஜன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.