“ரஷ்யாவிடம் இந்தியா இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் அவருடன் புளோரிடாவில் இருந்து தலைநகர் வாஷிங்டன் டிசிக்குச் செல்லும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, செய்தியாளர் சந்திப்புக்கு இடையே பேசிய லிண்ட்சே கிரஹாம், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாகக் குறைத்துவிட்டதாகவும், அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது விதித்த கூடுதல் வரிதான் இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து பேசிய டொனால்டு ட்ரம்ப், ‘‘அமெரிக்கா விதித்துள்ள தடைகள், ரஷ்யாவை கடுமையாக பாதித்து வருகின்றன. அடிப்படையில் அவர்கள் (இந்தியா) என்னை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினார்கள். மோடி ஒரு நல்ல மனிதர். (ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால்) நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம். அவர்கள் வர்த்தகம் செய்கிறார்கள். நாங்கள் அவர்கள் மீது மிக விரைவாக வரிகளை உயர்த்த முடியும். அப்போது அது அவர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்’’ என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.