காவல்துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் வேலியே பயிரை மேய்ந்த காரியம் போல கீழ்த்தரமான செயல்களை செய்திருப்பதாக வந்த புகார் மிகப்பெரிய அதிர்ச்சியை நீலகிரி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பண விவகாரம் தொடர்பாக இளம்பெண் ஒருவர் புகார் கொடுப்பதற்காக வந்துள்ளார். இந்த புகாரின்பேரில் அந்தக் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடந்தது. இதற்கு பிறகு இந்த வழக்கு தொடர்பாக அடிக்கடி காவல் நிலையத்திற்கு அப்பெண் வந்து சென்றுள்ளார்.
அப்போது ஏட்டாக வேலை பார்க்கும் ஜெயபாண்டிக்கும், அப்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று, ஆமத்தூர் அருகே வீட்டில் அந்த பெண்ணும், ஏட்டுவும் தனிமையில் இருந்துள்ளனர். இதை அந்த பெண்ணின் கணவரே நேரில் பார்த்து ஏட்டுவை கையும் களவுமாக பிடிக்க, ஏட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த ஆத்திரத்தில் ஏட்டுவின் இருசக்கர வாகனத்தை கணவரும், அந்த பகுதி மக்களும் சேர்ந்து சேதப்படுத்தினர்.
அத்துடன், சம்பந்தப்பட்ட ஏட்டு மீது பெண்ணின் கணவர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஏட்டுவை தற்காலிகமாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று, ஜெயபாண்டியைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அதே போல் விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் ஓட்டுநராக வேலை பார்ப்பவர் ஜெயச்சந்திரன்.. இவருக்கும் பாண்டியன் நகர் (ஊரக) காவல் நிலையத்தில் பணியாற்றும் ஜெயக்கொடி என்ற பெண் காவல்துறையினருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது. ஒருகட்டத்தில் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் காவலர், சூலக்கரை காவல் நிலையத்திற்கு சென்று , ஜெயச்சந்திரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.. அத்துடன், அந்த காவல் நிலையத்தையே அமளி துமளி செய்துவிட்டார். இதையடுத்து, ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயக்கொடி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விட்டனர்.
இப்போது நீலகிரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன்.. இவருக்கு 45 வயதாகிறது. கடந்த 2 வருடங்களாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அதாவது காவலரின் பயணப்படிக்கான வவுச்சர் ஒப்புதல் செய்து பணம் கொடுத்தல் உள்பட பல்வேறு வகையான எழுத்து பணிகளை செய்து வருகிறார்..
அப்படித்தான், நீலகிரி மாவட்டத்தில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர், வெளி மாவட்டத்திற்கு சென்று வந்த செலவு விவரங்களுக்கான தொகையை தரக்கோரி, முருகனிடம் விண்ணப்பத்துடன் வவுச்சர் தந்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு தன்னுடைய அலைபேசி எண்ணுக்கு விண்ணப்பத்தில் பதிவு செய்திருந்தார். உடனே அந்த அலைபேசி எண்ணை குறித்து வைத்து கொண்ட முருகன், தினந்தோறும் குட்மார்னிங், குட்நைட் என்று குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். திடீரென புது நம்பரில் இருந்து குறுஞ்செய்தி வந்ததை பெண் ஆய்வாளர் கவனித்துள்ளார். எனினும் குட்மார்னிங், குட்நைட் குறுஞ்செய்தி என்பதாலும், புது நம்பர் என்பதாலும் எந்த பதிலும் தராமல் விட்டுவிட்டார்.
ஆனால் சில வாரங்களிலேயே பெண் காவல் ஆய்வாளரின் அலைபேசிக்கு ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை முருகன் அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஆய்வாளர், உடனடியாக இதுகுறித்து ஊட்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணையும் ஆரம்பமானது. அப்போதுதான், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே வேலை பார்க்கும் முருகன் என்பது தெரியவந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.