இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த மீனவர் மாரியப்பன் மகள் கவிதா. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற இளைஞர் மாணவி கவிதாவை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்தது மட்டுமின்றி மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துளளார். இதுகுறித்து மாணவி அவரது தந்தை மாரியப்பனிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து முனியராஜன் வீட்டிற்குச் சென்ற மாணவியின் தந்தை மாரியப்பன் அந்த இளைஞர் முனியராஜைக் கண்டித்துள்ளார். இந்நிலையில், இன்று காலை மாணவி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது முனியராஜ் வழிமறித்து காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மாணவி மறுத்ததால், ஆத்திரம் அடைந்த முனியராஜ் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் மாணவி மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அந்த மாணவியை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மருத்துவ பரிசோதனையில் மாணவி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் துறைமுக காவல்துறை மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய முனியராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான மாணவியின் உறவினர்கள் ராமேசுவரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு கொலையாளிக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என வற்புறுத்தினர். இந்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.