திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநில பனியன் நிறுவன தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்து காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றியபோது காவல்துறையினருக்கும், சில தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒருகாலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து ஒரு சராசரியான ஊர் திருப்பூர். இன்று தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்த திருப்பூர் மாநகராட்சியை போல் ஒரு திருப்பூர் மாநகராட்சி இல்லை. இருப்புப் பாதையும் பனியன் தொழிலும் திருப்பூரை உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது. திருப்பூர் மாநகரத்திற்குள் 2005-க்கு முன்பு சென்றிருந்தால், ஓரளவே நகரம் பெரிதாக இருந்திருக்கும். ஆனால் கடந்த 20 வருடங்களில் திருப்பூர் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

திருப்பூர் மாநகரம், பக்கத்தில் உள்ள பெரிய ஊரான ஈரோட்டை விடவும் பெரிதாக வளர்ந்துவிட்டது. அதேபோல் கோயம்புத்தூருக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. திருப்பூர் மாநகரம் மேற்கே அவினாசி வரையிலும், தாராபுரம் சாலையில் கொடுவாய் வரையிலும், அந்த பக்கம் பெருமாநல்லூர் வரையிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இது இல்லாமல் ஊத்துக்குளி சாலை, காங்கேயம் சாலை, மங்கலம் ரோடு என எல்லா பக்கமும் நகரமும் முழுமையாக வளர்ந்துவிட்டது. மாநகரம் வேகமாக வளருவதற்கு ஏற்ப உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது சவலாக உள்ளது. குறிப்பாக குப்பைகளை அகற்றுவது என்பது சவாலாக இருக்கிறது.
ஏனெனில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்பு பாறைகுழிகளில் கொட்டப்பட்டு வந்தது. ஆனால் தற்போது திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் எங்கு சென்று குப்பையை கொட்டினாலும் அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் குப்பை கொட்ட இடம் கிடைக்காமல் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் 25-வது வார்டு சிறுபூலுவப்பட்டியில், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு குப்பை குவிந்து காணப்படுவதுடன், கடுமையான துர்நாற்றமும் வீச தொடங்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அருகில் உள்ள பனியன் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 25-வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில் முகக்கவசம் அணிந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் கவுதம், உதவி ஆணையர்பிரதீப்குமார், ஆய்வாளர்கள் பிரேமா, இளங்கோ மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். இதில் மொத்தம் 100-க்கு மேற்பட்டோர் கைது செய்து காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றியபோது காவல்துறையினருக்கும், சில தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.