கார்த்திகை, மார்கழி மாதங்களில் அய்யப்பன் மற்றும் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். அப்போது இறைச்சி மற்றும் முட்டை சேர்த்து கொள்ள மாட்டார்கள். இந்நிலையில், தீபாவளிக்கு பின்னர் முட்டை விலை தினமும் 5 காசுகள் அதிகரித்து வந்த நிலையில் வரலாறு காணாத அளவிற்கு முட்டை விலை உயர்ந்து 7 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
ஆம்லெட், கலக்கி, ஆப்பாயில் மற்றும் அவித்த முட்டை என விதவிதமான உணவு வகைகளாக தயார் செய்துமக்கள் தினமும் சாப்பிடுவது வழக்கம். புரதம், வைட்டமின்கள் நிறைந்த உணவான முட்டை என்பதால் ஒரு சிலருக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும் போது கட்டாயம் உணவில் சேர்ப்பார்கள். தற்போது முட்டையின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சில்லரை விலையில் தற்போது கடைகளில் முட்டை ஒன்று ரூ.7-க்கு மேல் விற்பனையாகிறது.
முட்டை விலை கடந்த அக்டோபர் வரை வெறும் 5 ரூபாய் என்கிற அளவில் தான் இருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகைக்கு பின்பு விலை கிடுகிடுவென உயர்ந்தது. ரூ.5.50, ரூ.6 என வேகமாக உயர்ந்த முட்டை தற்போது 7 ரூபாயை தாண்டி உள்ளது. வருகிற நாட்களில் இந்த விலை இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள். நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. உலக நாடுகளில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், முட்டை விலை 7 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரலாறு காணாத அளவிற்கு முட்டை விலை உயர்ந்துள்ளது.
முட்டை உற்பத்தியை பொறுத்தவரை தமிழ்நாட்டை நாமக்கல், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய பகுதிகளில் இருந்துதான் அதிக அளவில் முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக நாமக்கல் பகுதியில் தான் அதிக அளவில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. முட்டை விலை நாமக்கல் பகுதியில் தான் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதி காரணமாக விலை உயர்ந்து வருகிறது.
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து, பிரேசில், கனடா, நார்வே நாடுகளுக்கு முட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முட்டை விலை நாளொன்றுக்கு 5 காசுகள் வீதம் உயர்ந்து மொத்த விலைக்கே முட்டை ரூ.5.50-க்கு கிடைத்த நிலையில், தற்போது ரூ.6.05-க்கு தருகிறார்கள். ஒரு முட்டைக்கு போக்குவரத்து செலவாக 10 காசுகள் ஆகிறது. நாங்கள் மொத்த விலையில் கடைக்காரர்களுக்கு ரூ.6.40 முதல் ரூ.6.50 வரை விற்பனை செய்யப்பட்டு சில்லறை விற்பனையாளர்கள் ரூ.7-க்கு விற்பனை செய்கின்றனர். முட்டை ஏற்றுமதி காரணங்களால் வரலாறு காணாத அளவிற்கு முட்டை விலை உயர்ந்துள்ளது.