சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் 12 ஆயிரம் சதுர அடியில் நிலம் இருப்பதாகவும், அங்கு வீடு கட்ட போவதாகவும் கூறி SBI வங்கியில் போலி ஆதார் கார்டு, வாரிசு சான்றிதழ் சமர்ப்பித்து ரூ.7 கோடி கடன் வாங்கி மோசடி செய்த இரு பெண்களை காவல்துறையினர் கைது மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். நாட்டில் சீட்டு போட்டு மோசடி, போலி ஆவணங்கள் தயார் செய்து அப்பாவி மக்களை ஏமாற்றி மோசடி, ஆன்லைன் மோசடி என மோசடி என நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினரும் எவ்வளவோ விழிப்புணர்வு செய்தாலும் இந்த சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கி ரூ.7 கோடி மோசடி செய்ததாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், ‘காம்போ – வீட்டுக்கடன்’ என்ற பெயரில் எங்கள் வங்கியில் சுமார் ரூ.7 கோடி வரை கடன் பெறப்பட்டு அந்த கடன் திருப்பி செலுத்தப்படாமல் மிகப்பெரிய மோசடி அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. இந்த மோசடியால் எங்கள் வங்கிக்கு ரூ.7 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. வீடு கட்டப்போகிறோம் என்று சென்னை சோழிங்கநல்லூரில் 12,000 சதுர அடி நிலத்தை எங்களிடம் டாக்குமெண்டாக காட்டியுள்ளனர்.
நிலத்தின் உரிமையாளர்கள் ரமேஷ், பாரதி ஆகியோரின் வாரிசு என சொல்லி, சென்னை பெரம்பூரை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண் உரிமை கொண்டாடி உள்ளார். வெறொரு கணவன், மனைவி இருவருக்கு அந்த நிலத்தை சரஸ்வதி விற்பனை செய்தது மாதிரியும் அந்த நிலத்தில்தான் வீடுகட்ட போகிறோம் என்றும் போலியான ஆவணங்கள் வங்கியில் சமர்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆவணத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த வாரிசு சான்றிதழானது போலி என்பது தெரிய வந்துள்ளது. நிலத்தை வாங்கிய கணவன், மனைவி இருவரும் வீடு கட்டப்போவதாக கூறி ரூ.7 கோடியை வாங்கிவிட்டு பணத்தை இன்னமும் திருப்பி செலுத்தவில்லை. மிகவும் சாமர்த்தியமாகவும், திட்டமிட்டும் இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர்.
எனவே இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. வங்கியில் போலி ஆவணங்களை சமர்பித்து ரூ.7 கோடி மோசடி செய்யப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான கணவன், மனைவி இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. மேலும், போலியான நிலத்தையும் காட்டி, வீடும் கட்டாமல் ரூ.7 கோடியை கடன் வாங்கி, பகல் கொள்ளை நடத்தியது போல இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது பற்றி எல்லாம் தீவிரமாக விசாரிக்காமல் இவ்வளவு பெரிய தொகையை கடன் கொடுத்ததன் மூலம் வங்கி அதிகாரிகள் சிலரும் இதற்கு உடந்தையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
தற்போது மோசடிக்கு துணைபோனதாக சரஸ்வதி என்ற பெண் மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த புரோக்கர் ஜெமிலா பேகமும் என்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டுக்கு தப்பி சென்ற கணவன், மனைவியை கைது செய்யவும், மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட வங்கி அதிகாரிகள் சிலரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.