நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில், பிலிம் சிட்டி நுழைவு வாயிலில் அருகே பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழர்களின் கலாசாரத்தை மீறும் வகையிலும், முகம் சுளிக்க செய்யும் செயல்கள் நடைபெறுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று மாலை போரட்டம் அறிவிக்கப்பட்டது. அடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் அருகே காவல்துறை குவிக்கப்பட்டனர்.
பிலிம் சிட்டி நுழைவு வாயிலின் எதிரே குந்தம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பாதையில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்து இருந்தனர். இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் அங்கு குவிய தொடங்கினர். இதனால் காவல்துறையினரும் உடனே அங்கு குவிக்கப்பட்டனர். பிலிம் சிட்டிக்குள் யாரும் நுழையமுடியாத வகையில் ஏராளமான தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தலைமையில் 1000-க்கும் அதிகமானோர் திரண்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலாச்சார சீரழிவை உருவாக்கும் பிக் பாஸை அனுமதிக்க மாட்டோம்.. அனுமதிக்க மாட்டோம்.. தமிழக அரசே.. தமிழக அரசே தடை செய்.. தடை செய்.. பிக் பாஸை தடை செய்.. என்ற பதாகைகளை ஏந்தி நின்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் புறக்கணிப்போம்.. புறக்கணிப்போம் நடிகர் விஜய் சேதுபதியை, விஜய் டிவி நிகழ்ச்சியை எனவும், காத்திடுவோம் காத்திடுவோம் சமூக ஒழுக்கத்தினை காத்திடுவோம்.. என்றும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர்ந்து வேல்முருகன் பேசுகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் தொடர்சியாக அத்துமீறலும், இரட்டை அர்த்த வசனங்களும், பார்க்கின்ற தமிழ் சமூகத்திற்கு சங்கடம் ஏற்படுத்தும் வகையில், பார்க்க முடியாத வகையில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உடனடியாக இதனை தொலைக்காட்சி நிறுவனம் ஒழுங்குப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஆந்திராவில் தடை செய்யப்பட்டு, பிறகு ஒழுங்குப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. மிக மோசமான இதுபோன்ற காட்சிகளும், பதிவுகளும் இடம் பெறுகிறது. இதனை விஜய் டிவி நிர்வாகம் ஒழுங்கு செய்யவில்லை என்றால், நிச்சயம் நானே அடித்து நொறுக்குவேன்.. என வேல்முருகன் தெரிவித்தார்.